மழை பொய்த்து விட்ட நெல்லை மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்; நல்லகண்ணு பேட்டி

நெல்லை மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

nalla

களக்காடு அருகே உள்ள கீழவடகரை, பத்மநேரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடி ஏற்றும் விழா நடந்தது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான ஆர்.நல்லகண்ணு கலந்துகொண்டு கொடி ஏற்றினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நெல்லை மாவட்டத்தில் மழை பொய்த்து விட்டது. தண்ணீர் இன்றி வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே நெல்லை மாவட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் காவிரி தண்ணீர் பிரச்சினை 50 ஆண்டு காலமாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்தாண்டும் ஜூன் 1–ந் தேதி திறந்து விடப்பட வேண்டிய தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லை. கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எனவே காவிரி மேலாண்மை குழுவை கூட்டி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுவாணி, பாலாற்று தண்ணீரிலும் பிரச்சினை உள்ளது. பாலாற்றில் தடுப்பணை கட்டி வரும் ஆந்திர அரசை, மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் கடற்கரை ஓரங்களில் தாது மணல் கொள்ளையும், ஆறு, கால்வாய்களில் மணல் கொள்ளையும் நடந்து வருகிறது. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். உள்ளாட்சியில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்து வந்தது, குறைந்தபட்ச ஜனநாயகமாக இருந்து வந்தது. இதையும் அவர்கள் (அரசு) விரும்பவில்லை. உறுப்பினர்களை பணம் கொடுத்து மாற்றி விடலாம் என்று எண்ணத்திலேயே, இந்த முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். இது ஜனநாயக விரோத செயல் ஆகும். இதனை உடனடியாக கைவிட வேண்டும். மீண்டும் மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top