பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது பற்றி மத்திய அரசிடம் ஆந்திரா அனுமதி கேட்கவில்லை;மத்திய மந்திரி

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் பிரச்சினை தொடர்பாக டெல்லி மேல்–சபையில் கடந்த ஜூலை மாதம் 27–ந் தேதி பேசிய தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, ஆந்திர அரசின் அந்த திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

palaru 600 1

அதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய நீர்வளத்துறை ராஜாங்க மந்திரி சஞ்சீவ் குமார் பல்யான் தனது அமைச்சகத்தின் சார்பில் திருச்சி சிவாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பாலாற்று படுகையின் தண்ணீரை பயன்படுத்துவது குறித்து 1892–ம் ஆண்டில் அப்போதைய மைசூர் மாகாணத்துக்கும், மதராஸ் மாகாணத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் விதி 2–ன் படி, மதராஸ் அரசின் (தற்போது தமிழக அரசு) ஒப்புதல் இன்றி பாலாற்றின் குறுக்கே மற்றும் ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ள வடிகால் பகுதிகளில் மைசூர் மாகாணம் நீர்த்தேக்கம் அல்லது அணைக்கட்டு எதையும் கட்டக்கூடாது.

விதி 4–ன் அடிப்படையில் இரு மாநில அரசுகளுக்கு இடையே இது தொடர்பாக ஏதேனும் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் இந்த பிரச்சினை, சம்பந்தப்பட்ட இரு மாநிலங்கள் அல்லது மத்திய அரசால் நியமிக்கப்படும் நடுவர்களின் பரிசீலனைக்கு முன்வைக்கப்படும்.

இதற்கான நடுவர் குழுவை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களிடம் இருந்து எந்த விதமான கோரிக்கையும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. மேலும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டம் 1956–ன் படி, இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பது குறித்து இரு மாநிலங்களிடம் இருந்தும் எந்த கோரிக்கையும் இதுவரை மத்திய அரசுக்கு வரவில்லை.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் படுகைகளில் அமைக்கப்படும் பெரிய அல்லது நடுத்தர நீர்ப்பாசன அணைக்கட்டுகளின் கட்டுமானம் பற்றிய தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியான ஆய்வினை மத்திய நீர்வளத்துறை ஆணையம் மேற்கொள்கிறது.

அதன் பிறகு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவால் அந்த திட்டம் ஆய்வு செய்யப்படும். எந்த ஒரு பெரிய அணைக்கட்டு திட்டத்தையும் இந்த தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தாமல் நடைமுறைப்படுத்த முடியாது.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பான, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஆய்வுக்கான திட்டம் எதையும் ஆந்திர அரசு மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் பரிசீலனைக்கு முன்வைக்கவில்லை.

மேலும் 1892–ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்குமாறு தமிழக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top