பனாமா ஆவண கசிவு விவகாரத்தில் வருமான வரித்துறை நடவடிக்கை தகவல்கள் பெற அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடிதம்

இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் பணம் பதுக்கிய பனாமா ஆவண கசிவு விவகாரத்தில், வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் பெற அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 200 வேண்டுகோள் கடிதங்கள் அனுப்பியது.

Document-LeakIn-the-case-ofIncome-taxActivity_SECVPF

வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்கள், மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரகசியமாக முதலீடு செய்திருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள தகவல்கள், உலக நாடுகளில் எல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வகையில் பனாமாவின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் சுமார் 1 கோடியே 10 லட்சம் ரகசிய ஆவணங்கள், உலக நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி கம்பெனிகள் துவங்கவும், ரகசிய வங்கி கணக்குகள் தொடங்கவும் உதவி இருப்பதை காட்டுகின்றன.

இந்த பனாமா ஆவண கசிவு விவகாரத்தில் நமது நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் அதிபர்கள், சினிமா உலக பிரபலங்கள் என 500 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்காக ‘மேக்’ என்னும் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் வருமான வரித்துறை, பாரத ரிசர்வ் வங்கி, நிதி புலனாய்வு பிரிவு, அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவின் விசாரணை வளையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பனாமா ஆவண கசிவு விவகாரத்தில் இடம் பெற்றிருக்கிற இந்தியர்
களின் முதலீடுகள், டெபாசிட்டுகள் பற்றிய ரகசிய தகவல்களைப் பெறுவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வருமான வரித்துறை வேண்டுகோள் கடிதங்கள் அனுப்பி உள்ளது.

இப்படி சுமார் 200 வேண்டுகோள் கடிதங்களை வருமான வரித்துறை அனுப்பி வைத்துள்ளது.

இதற்காக வருமான வரித்துறை இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு உடன்படிக்கை, வரி தகவல் பரிமாற்ற உடன்படிக்கை மற்றும் இதுபோன்ற உடன்படிக்கைகளை செயல்படுத்தி உள்ளது.

மேலும், பட்டியலில் இடம் பெற்றுள்ள 380 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுடன் வருமான வரித்துறை தொடர்பில் உள்ளது. இவர்களில் சுமார் 200 பேர் தங்களுக்கு மேல்நாடுகளில் ரகசிய வங்கிக்கணக்குகள், முதலீடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. மற்றவர்களில் பலரது இருப்பிடமே தெரியவில்லை, இன்னும் சிலர் தங்களுக்கு ரகசிய முதலீடுகள் இருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top