அயனாவரத்தில் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளை: ஊழியர் நண்பருடன் தப்பி ஓட்டம்

201609041541165383_Ayanavaram-near-jewelry-shop-robbery-2-people-escape_SECVPF

அயனாவரம், சோமசுந்தரம் 6-வது தெருவில் ‘‘பாலாஜி தங்கமாளிகை’’ நகைக் கடை உள்ளது. இதன் உரிமையாளர் கோபாராம்.

கடையின் மேல் பகுதியில் 2 மாடி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம்.

நகை கடையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபக் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் கோபாராமின் வீட்டிலேயே தங்கி இருந்தார். தீபக் மற்றும் கோபாராமின் 2 மகன்கள் நகை விற்பனையை கவனித்து வந்தனர்.

நேற்று மதியம் கோபாராம் ஓட்டேரியில் உள்ள ஜெயின் கோவிலுக்கு கடையை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார். அப்போது தீபக்கையும் அவர் அழைத்தார்.

ஆனால் அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வீட்டிலேயே இருந்து விட்டார்.

மாலையில் கோபாராம் திரும்பி வந்த போது தீபக் வீட்டில் இல்லை. அவர் நண்பர் வீடுகளுக்கு சென்று இருக்கலாம் என்று நினைத்து இருந்தார்.

இன்று காலை கோபாராம் கடையை திறந்த போது 9 கிலோ நகைகளை காணவில்லை. லாக்கரில் இருந்த ரூ.2 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த கோபாராம், தீபக்கின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதுகுறித்து அயனாவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமி‌ஷனர் சங்கரன், இன்ஸ்பெக்டர் கண்ணகி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

கடை ஊழியர் தீபக் திட்டமிட்டு கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியது தெரிந்தது. அவர் கோபாராமின் நெருங்கிய நண்பர் மகன். கடந்த 3 ஆண்டுகளாக கடையில் வேலை பார்த்தார்.

இதனால் தீபக்கை தனது வீட்டிலேயே தங்க வைத்திருந்தார். நேற்று மதியம் கோபாராம் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றதும் தீபக் வீட்டில் இருந்த சாவியை எடுத்து கடையை திறந்து இருக்கிறார்.

பின்னர் கடையில் இருந்த நகையை சுருட்டி கொண்டு தப்பி விட்டார்.அவருடன் மற்றொரு வாலிபர் சென்றதையும் அதே பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து இருக்கிறார்கள்.

எனவே தீபக், நண்பருடன் வந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவை தீபக் எடுத்து சென்று விட்டதால் அவருடன் வந்த நண்பர் யார்? என்று தெரியவில்லை. கொள்ளை போன மொத்த நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

தீபக்கின் சொந்த ஊர் ராஜஸ்தான் என்பதால் அவர் நண்பருடன் அங்கு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார் கள். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.

நகை கடையில் 9 கிலோ நகை-பணத்தை ஊழியரே கொள்ளையடித்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top