அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சானியா, பெயஸ் ஜோடிகள் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிசில் இந்தியாவின் சானியா, பெயஸ், போபண்ணா ஜோடிகள் தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்றன. ஒற்றையரில் ஸ்பெயின் முன்னணி வீராங்கனை முகுருஜா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 3–வது நாளில், ஆண்கள் ஒற்றையர் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–0, 7–5, 6–1 என்ற நேர் செட் கணக்கில் ஆன்ட்ரியாஸ் செப்பியை (இத்தாலி) துவம்சம் செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ‘ஆர்தர் ஆஷ்’ ஆடுகளத்தில் நடந்த ஆட்டத்தின் போது மழை தூரல் விழுந்ததால் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மூடப்பட்டு ஆட்டம் தொடர்ந்து நடந்தது. இங்கு மேற்கூரை மூடப்பட்டு நடந்த முதல் ஆட்டமாக வரலாற்றில் இது பதிவானது.
‘நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச் (செர்பியா) விளையாடாமலேயே 3–வது சுற்றை அடைந்தார். அவரை எதிர்த்து ஆட இருந்த ஜிரி வெஸ்லி (செக்குடியரசு) காயத்தால் விலகி விட்டார்.
விம்பிள்டனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான 6–ம் நிலை வீரர் கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 2–வது சுற்றோடு நடையை கட்டினார். அவரை, தகுதி நிலை வீரரும், தரவரிசையில் 120–வது இடத்தில் உள்ளவருமான அமெரிக்காவின் ரையான் ஹாரிசன் 6–7(4), 7–5, 7–5, 6–4 என்ற செட் கணக்கில் விரட்டினார். கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), ஜான் இஸ்னர்(அமெரிக்கா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), சோங்கா (பிரான்ஸ்), 2014–ம் ஆண்டு சாம்பியன் மரின் சிலிச் (குரோஷியா), கைல் எட்மன்ட் (இங்கிலாந்து) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா– பிரிடெரிக் நெல்சன் (டென்மார்க்) கூட்டணி 6–3, 6–7(3), 6–3 என்ற செட் கணக்கில் ராடக் ஸ்டெபனக் (செக்குடியரசு)– ஜிமோன்ஜிச் (செர்பியா) இணையை பதம் பார்த்தது.
பெண்கள் ஒற்றையர் 2–வது சுற்றில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும், 3–ம் நிலை வீராங்கனையுமான ஸ்பெயினின் கார்பின் முகுருஜா எதிர்பாராத வகையில் மண்ணை கவ்வினார். இவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் தரவரிசையில் 48–வது இடம் வகிக்கும் அனஸ்டசிஜா செவஸ்டோவா (லாத்வியா). இவர் 7–5, 6–4 என்ற நேர் செட் கணக்கில் முகுருஜாவை வெளியேற்றினார். அமெரிக்க ஓபனில் 4–வது முறையாக கலந்து கொண்ட முகுருஜா இதுவரை 3–வது சுற்றை எட்டியது கிடையாது.
முகுருஜாவை திணறடித்த 26 வயதான செவஸ்டோவா, இடுப்பு பகுதி காயம் மற்றும் உடல்நிலை பிரச்சினையால் சர்வதேச டென்னிசில் இருந்து விலகுவதாக 2013–ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். அதன் பிறகு காயத்தில் இருந்து குணமடைந்து, கடந்த ஆண்டு மறுபிரவேசம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் 10–ம் நிலை வீராங்கனையும், 2004–ம் ஆண்டு சாம்பியனுமான ஸ்வெட்லனா குஸ்னட்சோவாவை (ரஷியா) சாய்த்தார். தொடக்கத்தில் 0–4 என்று பின்தங்கி அதன் பிறகு மீண்டு வந்து அசத்திய வோஸ்னியாக்கி, இந்த ஆண்டில் டாப்–10 வீராங்கனைகளில் ஒருவரை வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.
2–ம் நிலை நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் ஏஞ்சலிக் கெர்பர் 6–2, 7–6 (6) என்ற நேர் செட் கணக்கில் மிர்ஜனா லுசிச் பரோனியை (குரோஷியா) தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார்.
இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டா தன்னை எதிர்த்த பைரன்கோவாவை (பல்கேரியா) 6–2, 5–7, 6–2 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார்.
முன்னதாக ஆட்டத்தின் போது சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆடிய கோன்டா, போட்டி முடிந்ததும் வாட்டி வதைத்த வெயிலை தாங்க முடியாமல் நிலைகுலைந்து மைதானத்தில் அப்படியே உட்கார்ந்து விட்டார். மூச்சு விடுவதில் சிரமப்பட்டார். இதையடுத்து உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு சகஜ நிலைக்கு திரும்பினார். சிபுல்கோவா (சுலோவக்கியா), பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), ஸ்விடோலினா (உக்ரைன்), மேடிசன் கீஸ், கேத்ரின் பெலிஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோரும் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவாவுடன் கைகோர்த்துள்ளார். இதன் முதலாவது சுற்றில் சானியா– ஸ்டிரிகோவா இணை 6–3, 6–2 என்ற நேர் செட்டில் ஜாடா மை ஹர்ட்– ஷிபஹரா (அமெரிக்கா) ஜோடியை எளிதில் வென்றது.
கலப்பு இரட்டையரில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், சுவிட்சர்லாந்து மங்கை மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து களம் புகுந்தார். இவர்கள் முதலாவது ரவுண்டில் 6–3, 6–2 என்ற நேர் செட்டில் சச்சியா விக்கெரி–பிரான்செஸ் டியாபோ (அமெரிக்கா) இணையை வீழ்த்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top