சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு

சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ராம்குமாரின் தாயார் புஷ்பம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1-இல் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, ராம்குமாரின் தாய் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கொலை சம்பவத்தை பலர் விடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர். பயணிகளை கொலைகாரர்கள் துரத்தியுள்ளனர். இதுதொடர்பாக, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சில பயணிகள் புகார் அளித்துள்ளனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாளில் கைரேகை பதிவாகவில்லை என்றும், அது கர்நாடகத்தில் பயன்படுத்தப்படும் அரிவாள் என்றும் காவல் துறை கூறுகிறது. கொலைக்கான ஆதாரங்களை காவல் துறையினர் பெங்களூரில் திரட்டியுள்ளனர்.

6 தனிப்படைகள் விசாரித்து, 14 சிம் கார்டுகள், ஒரு மடிக் கணினி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். பிலால் சித்திக் என்பவர் மீது சந்தேகம் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அவர் போலீஸ் விசாரணைக்கு 4 நாள்கள் உள்படுத்தப்பட்டார். இவற்றை காவல் துறை மறைத்துள்ளது.

உண்மை குற்றவாளிகளைப் பாதுகாக்க சட்டவிரோதமான முறையில் புலன் விசாரணை நடத்துகின்றனர். மோசமான புலன் விசாரணை நடக்கிறது. எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு கடந்த 30ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராம்ராஜ், ‘வழக்கில் சரிவர விசாரணை நடத்தவில்லை. உண்மை குற்றவாளிகளைப் பாதுகாக்க காவல்துறை முயற்சிப்பதால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்றார்.

இதையடுத்து போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் எமிலியாஸ், ‘குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இதுதொடர்பாக பதில் மனுவோ அல்லது அறிக்கையோ தாக்கல் செய்ய விரும்பவில்லை. நீதிமன்றம் கோரினால், வழக்கில் அனைத்து விசாரணை விவரங்களையும் தாக்கல் செய்கிறோம். இந்த வழக்கு விசாரணை ஒருதலைபட்சமாக நடைபெறவில்லை. விசாரணை சரியான திசையில் செல்கிறது’ என்றார். பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி புஷ்பம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக இன்று உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top