கூட்டுறவுத் துறை நிலை குறித்து வெள்ளை அறிக்கை: திமுக வலியுறுத்தல்

கூட்டுறவுத் துறை நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது.

பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ. சிவா பேசியதாவது:

5 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் போட முடியாத நிலை என பல்வேறு பிரச்னைகளில் புதுவை மாநிலம் சிக்கி உள்ளது. மக்கள் மீது வரியை திணிக்காமல் முழு பட்ஜெட்டாக முதல்வர் தாக்கல் செய்துள்ளார். இதற்காக திமுக சார்பில் பாராட்டுகிறோம்.

முந்தைய காலங்களில் தாங்கள் நினைத்ததையே பட்ஜெட்டில் சேர்த்து விடுவர். இந்த பட்ஜெட் அனைத்து கட்சி, அனைத்து தரப்பினர் கருத்தை அறிந்து போடப்பட்டுள்ளது.

அநைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச அரிசியை உயர்த்தி தந்துள்ளனர். மருத்துவ காப்பீடு திட்டத்தை தவறாமல் செயல்படுத்த வேண்டும். கூடுதல் தொகையை கேட்டுப் பெற வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் தொழில்துறையில் புதுச்சேரி பின்தங்கி விட்டது. பெரிய ஆலைகள் புதுவையை விட்டு சென்று விட்டன. புதிய தொழில்கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும். விற்பனை வரி, சுங்க வரி, உள்பட பல்வேறு வரிச்சலுகைகளை அளித்து தொழிற்சாலைகளை ஈர்க்க வேண்டும். சில அமைப்புகள் ஆலைகளை மிரட்டி மாமூல் கேட்கும் நிலை உளளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண்மை நிலங்கள் அனைத்து மனைகளாக்கப்பட்டு விட்டன. இதனால் விவசாயம் சீரழிந்து விட்டது. டிராக்டர் மானியத்தை கூடுதலாக தர வேண்டும். கால்நடை துறையை முந்தைய அரசு கண்டுக்கொள்ளவில்லை. கால்நடைகளை காக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும். நாட்டிலேயே புதுவையில் தான் பால் உற்பத்தி குறைவாக உள்ளது.

கூட்டுறவுத் துறை முந்தைய ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் போல் மாறி விட்டது. கூட்டுறவு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். காவலர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். காவல்துறையில் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகளை தர வேண்டும்.

வணிகர் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பழுதடைந்துள்ள பாரம்பரிய கட்டடங்களை புனரமைக்க தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் தனியாக சவக்கிடங்கை அமைக்க வேண்டும்.

வரிபாக்கி வைத்துள்ளோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கலால் துறையில் வசூலிக்காத கிஸ்திப்பணத்தை வசூலிக்க வேண்டும். மதுபான பார்கள் தொடர்பாக அரசு முடிவை ஏற்போம். தீயணைப்புத் துறைக்கு நவீன கருவிகளை வாங்க வேண்டும். அண்ணா திடலை பள்ளி மாணவ, மாணவியர் விளையாடும் மைதானமாக மாற்ற வேண்டும்.

புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார் சிவா.

பாஸ்கர்: கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக ஒதுக்கவில்லை.  நாங்கள் போராடித் தான் தொகுதியில் திட்டங்களை நிறைவேற்றினோம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top