ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதில் சிக்கல்

e8588213-a14a-4c77-94cf-5568ea632794_S_secvpfதிருவண்ணாமலை மாவட்டம் கிடாம்பாளையம் அருகே உள்ள பொன்னகர் பகுதியில் விவசாயி ஜெயபாலன் என்பவர் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார். 250 அடி வரை தோண்டப்பட்ட நிலையில் தண்ணீர் வரவில்லை. இதனால் பாதி தோண்டிய ஆழ்துளை கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுவிட்டார்.

இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் துரைக்கண்ணு என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி நேற்று ஆடுகளை மேய்க்க சென்றார். அவருடன் அவரது மனைவி ஜெயலட்சுமியும் தனது மகன்கள் சூரியா, சுஜித் ஆகியோரை அழைத்துச் சென்றார். அவர்களுடன் குழந்தையின் பாட்டி கோவிந்தம்மாளும் துணைக்கு சென்றார்.

நேற்று மாலை பாட்டியிடம் குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு ஜெயலட்சுமி, அருகில் உள்ள இடத்தில் கீரை பறிப்பதற்காக சென்றிருந்தார். துரைக்கண்ணுவும் சற்று தொலைவில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது சூரியாவும், சுஜித்தும் தனியாக விளையாடிக்கொண்டு இருந்தனர். அருகே மண் குவியல் இருந்ததால் அங்கு அவர்கள் விளையாட சென்றனர். ஆனால் அந்த இடம் மூடப்படாத ஆழ்துளை கிணறு உள்ள இடம் என்பதை யாரும் கவனிக்கவில்லை.

இந்த நிலையில் திடீரென சுஜித், அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் விழுந்து விட்டான். உடனே அதை பார்த்த அவனது அண்ணன் சூரியா, கதறி அழுதபடி தனது தாயாரிடம் ஓடி சென்று கூறினான். ஜெயலட்சுமியும் கதறியபடியே அங்கு வந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து குழந்தை விழுந்த இடத்தை பார்த்தனர். போலீசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். ஆழ்துளை கிணற்றுக்குள் 45 அடி ஆழத்தில் சுஜித் சிக்கிக் கொண்டதை பார்த்த அவர்கள் பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து அதன் வழியாக சென்று சுஜித்தை மீட்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் தோண்டும் பணி தொடங்கியது. மேலும் குழிக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை சுவாசிப்பதற்காக ஆக்சிஜனும் செலுத்தப்பட்டது.

குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காக அரக்கோணத்தில் உள்ள பேரிடர் மீட்புக்குழுவுக்கு கலெக்டர் ஞானசேகரன் தகவல் அனுப்பினர். அதனையடுத்து அரக்கோணத்தில் இருந்தும் வீரர்கள் விரைந்தனர்.

அங்கு குழந்தையை மீட்கும் பணியை பார்ப்பதற்காக அந்த பகுதி மக்கள் திரண்டு வந்தனர். நேரம் செல்லச்செல்ல பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மீட்பு பணியை துரிதப்படுத்த கலெக்டர் ஞானசேகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோரும் அங்கு வந்தனர். அவர்கள் மீட்பு பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினர்.

குழந்தை மீட்கப்பட்டவுடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்காக அங்கு 3 ஆம்புலன்சும் கொண்டு வரப்பட்டது. இரவு நேரம் என்பதால் அதிக வெளிச்சம் உள்ள விளக்குகளும் பொருத்தப்பட்டு மீட்பு பணிகள் இரவிலும் தொடர்ந்து நடந்தது.

இரவு 8.30 மணி அளவில் 20 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது. மேலும் 20 அடி தோண்டிவிட்டால் சிறுவனை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன் சுரங்கம் தோண்டும் பணி மேலும் தொடர்ந்தது. சிறுவனை எப்படியும் உயிருடன் மீட்க அதிகாரிகள் கடுமையான முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

மதுரை, திருச்சி, கோவையில் இருந்து நள்ளிர-வு 12 மணிக்கு ரோபோ டீம் வந்தனர். 3 ரோபோ மூலம் குழந்தையை மீட்க போராடினர்.

ரோபோவை ஆழ்துளை கிணற்றில் இறக்கினர். அப்போது குழந்தையை மண் மூடி இருப்பது தெரியவந்தது. குழந்தையின் கை மட்டும் மேலே தெரிகிறது. 1 ½ வயது குழந்தையாக இருப்பதால் கையை பிடித்து மேலே தூக்க முடியவில்லை. இதனால் ரோபோ முயற்சி தோல்வியடைந்தது.

இதனால் மீண்டும் பக்கவாட்டில் தோண்டி குழந்தையை மீட்க போராடி வருகின்றனர். காலை 7 மணிவரை 25 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது. 45 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளது. 25 அடி ஆழத்திற்கு மேல் பாறைகள் உள்ளதால் பள்ளம் தோண்டும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மீட்பு குழுவினர் குரல் எழுப்பியும் குழந்தையிடம் இருந்து எந்தவிதமான சத்தமும் வரவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் பதட்டமான நிலையில் உள்ளனர். 70க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் விடிய, விடிய போராடியும் குழந்தையை இன்னும் வெளியில் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் போராடி வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top