ஹென்றி திபேன் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி மதுரையில் நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம்; வைகோ

ஹென்றி திபேன் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி மதுரையில் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மதுரை மாவட்டம் மொட்டமலை பகுதியில் வசிக்கும் அலைகுடி சமூகத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்கின்ற ஆண்களும், பெண்களும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 28–ம் தேதியன்று, போலீசாரால் பொய்வழக்கு போடப்பட்டு மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டனர். ஏழைப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளானார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தந்த தகவலின் பேரில், மக்கள் கண்காணிப்பகத்தின் கள ஆய்வுக்குழு, தக்கலை போலீஸ் நிலையத்திற்குச் சென்று நடந்ததை அறிந்து, நீதி கேட்டு அறிக்கைகள் வெளியிட்டது. சித்ரவதைகளில் ஈடுபட்ட சிறப்பு போலீஸ் படையின் துணை ஆய்வாளர் விஜயன், தலைமைக் காவலர் மோகன், காவலர் பிரதீப் உள்ளிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த மாதம் 16–ம் தேதி தக்கலையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே பிரச்சினைக்காக, கடந்த மாதம் 25–ம் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமைகள் போராளியும், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனருமான வக்கீல் ஹென்றி திபேன் கலந்து கொண்டு போலீசாரின் அடக்குமுறையை கண்டித்துப் பேசியதற்காக அவர் மீது மதுரை மாநகர போலீஸ் பல்வேறு பிரிவுகளில் பொய் வழக்கு போட்டுள்ளது. போலீசாரின் இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

தமிழக அரசாலும், அனைத்து அமைப்புகளாலும் பாராட்டப்பட வேண்டிய மனித உரிமைகள் காப்பாளர் ஹென்றி திபேன் நீதி கேட்டதற்காக பொய்வழக்கு போட்ட செயல் அரசுக்கும் போலீசுக்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பொய் வழக்கை, உடனடியாகக் காவல்துறை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து, அடுத்த மாதம் 1–ம் தேதி (நாளை மறுதினம்) மதுரையில் நடைபெற இருக்கின்ற தொடர் முழக்க அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் தலைமையில் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top