எதிர்க்கட்சி. உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் இன்றுடன் முடிகிறது

201608290728472168_79-DMK-Members-suspension-ends-today_SECVPF

தமிழக சட்டசபையில் கடந்த 17-ந் தேதி நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ பயணம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பேசிய எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுக்குழுவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாக கருத்து ஒன்றை தெரிவித்தார். மு.க. ஸ்டாலின் தெரிவித்த அந்த கருத்தை சபாநாயகர் ப.தனபால் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால், எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டதுடன், ஒரு வாரம் இடைநீக்கமும் செய்யப்பட்டனர்.

இந்த இடைநீக்க நடவடிக்கையில் 79 தி.மு.க. உறுப்பினர்கள் சிக்கினாலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி (திருவாரூர்), கே.என்.நேரு (திருச்சி மேற்கு), ஆர்.காந்தி (ராணிப்பேட்டை), டாக்டர் பூங்கோதை (ஆலங்குளம்), ஐ.பெரியசாமி (ஆத்தூர்), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி), எம்.கே. மோகன் (அண்ணாநகர்), க.அன்பழகன் (கும்பகோணம்), ம.ராமச்சந்திரன் (ஒரத்தநாடு), கே.வி.சேகரன் (போளூர்) ஆகிய 10 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் என்ற நிலை இருந்தது.

தொடர்ந்து நடந்த 2 நாள் கூட்டத்தில், மற்ற தி.மு.க. உறுப்பினர்கள் கலந்துகொண்டாலும், 79 தி.மு.க. உறுப்பினர்களின் இடைநீக்க பிரச்சினை குறித்து பேச முயற்சித்து வெளிநடப்பு செய்தனர். அதே நேரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்ட 79 தி.மு.க. உறுப்பினர்கள் 18-ந் தேதி தலைமைச் செயலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டும், 19-ந் தேதி போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தியும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதனால், தலைமைச் செயலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு தொடர்ந்ததால், 22-ந் தேதி முதல் தி.மு.க. உறுப்பினர்களும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 79 தி.மு.க. உறுப்பினர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது. எனவே, நாளைய கூட்டத்தில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கின்றனர்.

தி.மு.க. உறுப்பினர்கள் 2 பேர் மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேச இருப்பதால், நாளைய விவாதத்தின் போது சட்டசபையில் அனல் பறக்கும் என தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top