தமிழகத்தின் கலாச்சார சின்னங்களுக்கு யுனெஸ்கோ பரிந்துரைகளை அரசு பின்பற்ற வேண்டும்; உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்களுக்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்க யுனெஸ்கோ பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

dre

தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் கோயில்களை பராமரிக்க தமிழக அரசு நிபுணர்கள் குழுவை அமைக்கவில்லை என்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குத் தொடர்ந்தது. அதேபோல பழமையான கோயில்களைப் புனரமைப்பு என்ற பெயரில் இடித்து தள்ளுவதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்களும், கோயில்களும் மிகப்பெரிய பாரம்பரியம் கொண்டவை. யுனெஸ்கோ விதிமுறைகளின்படி இவற்றை முறையாக சீரமைத்தால்தான் அவற்றுக்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்கும். இதுதொடர்பாக பூடான், இலங்கை, இந்தியா, மாலத்தீவு ஆகியவற்றுக்கான யுனெஸ்கோ இயக்குநர், தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கடந்த ஜூலை 15-ம் தேதி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்கள், பழமையான சிற்பங்கள் மற்றும் கோயில் சிலைகளை நிபுணர்கள் குழு அமைத்து முறையாக சீரமைக்க யுனெஸ்கோ தயாராக உள்ளது எனவும், இதற்கு தேவையான செலவுத் தொகையை தமிழக அரசு வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

அந்தக் கடிதத்தின் அடிப்படையில் தேவையான பணிகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை முன்வரவேண்டும். யுனெஸ்கோ புராதன சின்னங்களின் பட்டியலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மற்றும் செட்டிநாடு அரண்மனைகளையும் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு கருத்துரு அனுப்பியுள்ளது. இவற்றை முறையாக புனரமைத்து, பாதுகாக்க வசதிகள் இருந்தால் மட்டுமே அவற்றை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க முடியும். எனவே, இதனடிப்படையில் தமிழக அரசு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

தற்போது கடந்த 18-ம் தேதி யுனெஸ்கோ இயக்குநர் மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தை ஆய்வு செய்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். மாமல்லபுரம் சிற்பங்களைப் பாதுகாப்பது தொடர்பாக தொல்பொருள் ஆய்வுத்துறை கடந்த ஜூலை 29-ம் தேதி காஞ்சிபுரம் ஆட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தின் மீது ஆட்சியர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த அறிக்கையின்படி ஆட்சியர் மாமல்லபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

புராதன சின்னங்கள் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டால் அவற்றை தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனக்கூறி விசாரணையை வரும் அக்டோபர் 25-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top