மருத்துவமனை நிர்வாகம் எனக்கு உதவாததால் மனைவியின் உடலை 10 கி.மீ சுமந்து சென்றேன்; கண்ணீர் பேட்டி

மருத்துவமனையில் என்னுடைய மனைவி உயிரிழந்த பின்னர் எனக்கு உதவமுடியாது என்றனர் என்று ஒடிசாவில் மனைவியின் உடலை 6 மணிநேரங்கள் சுமந்தவர் கூறிஉள்ளார்.

936

ஒடிசா மாநிலம் காலாகேண்டி அரசு மருத்துவமனையில் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமாங் டெய் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது கணவர் தானா மஜ்கி தனது மனைவியின் உடலை கிராமத்துக்கு எடுத்து செல்ல, தன்னிடம் போதிய வசதி இல்லாததால் வாகனம் ஏற்பாடு செய்ய மருத்துவமனை நிர்வாகத்தின் உதவியை நாடினார். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

அவர் கதறி அழுது கெஞ்சியபோதும் வாகனம் வழங்கப்படமாட்டாது என மருத்துவமனை ஊழியர்கள் உறுதியாக சொல்லி விட்டனர்.

அதனைதொடர்ந்து தானா மஜ்கி, தனது மனைவியின் உடலை போர்வையில் சுற்றி தனது தோளில் வைத்துக்கொண்டு தனது கிராமத்தை நோக்கி புறப்பட்டார். தாயை இழந்த 12 வயது மகள் அழுதபடியே தந்தையுடன் நடந்து சென்றார். மருத்துவமனையில் இருந்து அவரது கிராமம் 60 கி.மீ தூரத்தில் உள்ளது. 10 கி.மீ தூரத்துக்கு அவர் தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றார். அதன் பின்னர் உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கு இதுபற்றி தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் அதிகாரிகளை தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துக்கூறி மீதி பயணத்துக்கு ஆம்புலன்சு ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு உடல் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையில், அவர் தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து செல்லும் காட்சி ஊடகங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் சடலத்தை எடுத்துச் செல்வதற்கு வாகனம் ஏற்பாடு செய்வதில் அலட்சியம் எதுவும் கிடையாது என்று கூறியது.

மருத்துவமனையில் அமாங் டெய்க்கு வார்டு தலைமை மருத்துவரால் இலவசமாக மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது. கடைசியாக அவரை 10 மணிக்கு பரிசோதனை செய்த மருத்துவர் கவலைக் கொண்டார். இருப்பினும் அதிகாலை ஒரு மணியளவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அமாங் டெய் மற்றும் அவருடைய கணவரை காணவில்லை. விசாரணை செய்ததில் அவர் யாரிடமும் ஆலோசிக்காமல் அவருடைய மனைவியின் சடலத்தை எடுத்துச் சென்றுவிட்டார். நோயாளி மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படவும் இல்லை அவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்படவும் இல்லை, என்று மருத்துவமனை தலைமை அதிகாரி கூறிஉள்ளார்.

மேலும், அமாங் டெய் சடலத்தை எடுத்துச் செல்ல யாரிடமும் தானா மஜ்கி உதவியும் கோரவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து பேசிய தானா மஜ்கி, “என்னுடைய மனைவி இரவு  12.30 மணியளவில் உயிரிழந்தார். என்னுடைய கிராமத்திற்கு சடலத்தை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். என்னால் சடலத்தை எடுத்துச் செல்ல பணம் வழங்கமுடியாது என்று அவர்களிடம் மன்றாடினேன். ஆனாலும் அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்கள் மறுக்கவே, நான் என்னுடைய மனைவின் சடலத்தை தோளில் சுமக்க தொடங்கிவிட்டேன்,” என்று கண்ணீர் மல்க கூறிஉள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top