அரியானா அரசு சார்பில் சாக்ஷிக்கு பாராட்டு விழா ரூ.2½ கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்குக்கு அரியானா அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது. அவருக்கு ரூ.2½ கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் சாக்ஷி மாலிக். அரியானாவை சேர்ந்த 23 வயதான சாக்ஷி மாலிக் பெண்களுக்கான மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

வெண்கலப்பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் நேற்று அதிகாலை விமானம் மூலம் டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியானா மாநில அமைச்சர்கள் மற்றும் சாக்ஷி மாலிக்கின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மல்யுத்த வீரர்–வீராங்கனைகள் திரண்டு வந்து வரவேற்றனர். பாரம்பரிய ஆட்டம், பாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து கார் மூலம் சாக்ஷி மாலிக் அவரது சொந்த மாநிலமான அரியானாவுக்கு அழைத்து செல்லப்பட்டார். வழியில் பல இடங்களில் அவருக்கு மல்யுத்த ரசிகர்கள் மகிழ்ச்சி ததும்ப வரவேற்பு அளித்தனர்.

ஜாஜர் மாவட்டத்தில் உள்ள பகதுர்கர் நகரில் சாக்ஷி மாலிக்குக்கு அரியானா அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் அரியானா முதல்–மந்திரி மனோகர் லால் கட்டார் கலந்து கொண்டு ரூ.2½ கோடி ஊக்கத் தொகையை வழங்கி பாராட்டினார். அத்துடன் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அரியானா மாநில நல்லெண்ண தூதராக சாக்ஷி நியமிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

விழாவில் முதல்–மந்திரி மனோகர் லால் கட்டார் பேசுகையில், ‘நமது இரண்டு மகள்களான சாக்ஷி, பி.வி.சிந்து ஆகியோர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள். விளையாட்டு மேம்பாட்டுக்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாக்ஷி தனது வீட்டையும், ஊரையும் மட்டுமின்றி, நமது மாநிலத்தையும், தேசத்தையும் பெருமைப்பட வைத்து இருக்கிறார். சாக்ஷிக்கு அரியானா மாநில அரசில் குரூப்–2 பணி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இது குறித்து அவர் சிந்தித்து முடிவு சொல்வதாக தெரிவித்துள்ளார்’ என்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் சாக்ஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஒலிம்பிக் பதக்கம் வென்றதன் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது. இது 12 ஆண்டு கால கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகும். எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தவர்களுக்கும், எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். விமான நிலையத்தில் எனது தந்தையை பார்த்ததும் கட்டித் தழுவி கொண்டேன். நான் வென்ற பதக்கத்தை அவரிடம் பெருமிதத்துடன் காண்பித்தேன். அதனை அவர் ஆனந்த கண்ணீர் மல்க பார்த்து மகிழ்ந்தார். எனது குடும்பத்தினர் அனைவரும் உணர்ச்சிமயமாக இருந்தனர். அதனை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சுனில்குமார், யோகேஷ்வர் தத் போன்றவர்கள் எனக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தார்கள். அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்று இருக்கிறேன்.

எனது கனவு நனவாக பயிற்சியாளரும், பெற்றோரும் பெரும் ஊக்கம் அளித்தனர். இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் என்று எப்போதும் நினைப்பேன். ஆனால் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி செல்லும் கவுரவம் கிடைத்ததை (நிறைவு விழாவில்) உண்மையிலேயே நம்ப முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top