உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளை தீண்டாமை கொடுமை அதிகம் உள்ள பகுதிகளாக அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளை தீண்டாமை கொடுமை அதிகம் உள்ள பகுதிகளாக அறிவிக்கக்கோரிய மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Usilampatti-Peraiyur-in-areas-dominated-areas_SECVPF

குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 5 சிறுவர்கள் மீது மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டி போலீசார் கடந்த 6-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் சம்பந்தமாக வக்கீல் ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாத நிலையில் 5 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது நியாயமற்றது. சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், எழுமலை இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சங்கையா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். உசிலம்பட்டி, பேரையூர் பகுதியை தீண்டாமை கொடுமை அதிகம் உள்ள பகுதியாக அறிவிக்க வேண்டும்.

இந்த பகுதியில் சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக செயல்படுத்தி வன்கொடுமைகள் நடப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும். உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், எழுமலை இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சங்கையா ஆகியோர் 5 சிறுவர்கள் மீதான வழக்கை விசாரிக்கக்கூடாது என்று டி.ஜி.பி. உத்தரவிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் ஒரு வக்கீல். பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடராதபட்சத்தில் மனுதாரர், இந்த நீதிமன்றத்தை மேடையாக பயன்படுத்தி தன்னை பிரபலப்படுத்தி கொள்ளவும், விளம்பரத்துக்காகவும், அதிகப்படியாக வழக்குகள் தனக்கு வர வேண்டும் என்பதற்காகவும் ஈடுபட்டுள்ளார். இது தொழில் தர்மத்தை மீறிய செயலாகும்.

தமிழ்நாடு பார் கவுன்சில் வக்கீல்களுக்கான நடத்தை விதிகளை உருவாக்கி இருக்கும்போது அதை ஒவ்வொரு வக்கீலும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மீறுபவர்களை திருத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த வழக்கிலும் அதை செய்ய வேண்டியது உள்ளது.

எனவே, மனுதாரர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை உரிய நடவடிக்கைக்காக ஐகோர்ட்டு கிளை பதிவாளர்(நீதித்துறை) தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த வழக்கில் வக்கீல்களுக்கான நடத்தை விதி மீறப்பட்டிருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக நாங்கள்(நீதிபதிகள்) கருதியதை பார் கவுன்சில் ஏற்றுக்கொண்டால் பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை பார் கவுன்சில் 6 மாதத்துக்குள் முடித்து இந்த நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று நம்புகிறோம்.

பல நேரங்களில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயர்கள், வழக்குகளில் ஆஜராகும் வக்கீல்களின் பெயர்கள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. வழக்குகளில் ஆஜராகும் வக்கீல்களின் பெயரை வெளியிடும்போது மறைமுகமாக அவர்கள் செய்யும் தொழிலை விளம்பரப்படுத்தும் வகையில் அது அமையும்.

எனவே, வழக்குகளில் ஆஜராகும் வக்கீல்களின் பெயரை பத்திரிகைகளில் வெளியிடக்கூடாது என்று ஐகோர்ட்டு கிளை பதிவாளர்(நிர்வாகம்) அனைத்து பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தலைமை நீதிபதியின் ஒதுக்கீடு அடிப்படையில் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். எனவே, நீதிபதிகளின் பெயரையும் பத்திரிகைகளில் வெளியிடக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம். நீதிமன்றங்களின் பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும்.

இந்த விவகாரம் சம்பந்தமாக உரிய அறிவுறுத்தல்களை வெளியிடுவதற்காக ஐகோர்ட்டு கிளை பதிவாளர் இந்த விஷயத்தை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பொதுநல வழக்கு என்ற பெயரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை நாங்கள்(நீதிபதிகள்) வேறு விதமாக பார்க்கிறோம்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல ஆவணங்களை கவனமாக இந்த நீதிமன்றம் பரிசீலித்தது. அதில், குழந்தைகள் நலக்கமிட்டியின் விசாரணை அறிக்கையும் அடங்கும். 5 சிறுவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு ஜோடிக்கப்பட்ட ஒன்றாகும் என்றும், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் தலைவர் மற்றும் அந்த சமுதாயத்தின் வக்கீல் ஆகியோரின் நிர்ப்பந்தம் காரணமாகவே அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குழந்தைகள் நலக்கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, போலீஸ் சூப்பிரண்டு இந்த வழக்கை முழுமையாக கண்காணித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்யான கதையை உருவாக்கிய அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்த யாரையும் தப்ப விடக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் பிரசுரிக்கும்போது குழந்தைகள், இளஞ்சிறார்களின் அடையாளப்படுத்தும் வகையில் வெளியிடக்கூடாது என்ற கொள்கை முடிவை ஒரு மாதத்துக்குள் அரசு எடுக்க வேண்டும். இதை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் பின்பற்ற வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.  இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top