பட்டேல் இன மக்களுக்கான போராட்டத்தின் மூலம் கோடிஸ்வரனாக மாறிய ஹர்திக் பட்டேல்

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு கேட்டு பெரும் போராட்டங்களை நடத்தி ஊடகங்களின் கவனத்தை கவர்ந்த ஹர்திக் பட்டேல் இந்த போராட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் கோடிஸ்வரனாக மாறிவிட்டதாக அவரது நண்பர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை கைது செய்த போலீசார் அவர்மீது பிரிவினைவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் வாளை உயர்த்திக் காட்டி பொதுமக்களிடையே வன்முறைக்கு வித்திட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சூரத் மாவட்ட சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

rttttt
தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின்மீது கடந்த மாதம் 8-ம் தேதி விசாரணை நடத்திய நீதிபதி அவரை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.

ஆறுமாத காலத்துக்கு குஜராத் மாநிலத்துக்குள் அவர் நுழையக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஹர்திக் பட்டேலை விடுதலை செய்வதாக தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டார். இதையடுத்து, சூரத் நகரில் உள்ள லஜ்பூர் சிறையில் 9 மாதங்களாக அடைபட்டு கிடந்த ஹர்திக் பட்டேல்(23), கடந்த மாதம் 15-ம் தேதி விடுதலையானார்.

சிறை வாசலில் காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் உற்சாக முழக்கத்துடன் மாலை மற்றும் துண்டுகளை அணிவித்து அவரை வரவேற்று, அழைத்துச் சென்றனர். அவருடன் சிறையில் இருந்த ஆதரவாளர்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கோர்ட் உத்தரவின்படி, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கியுள்ள ஹர்தில் பட்டேல் மீது இந்த போராட்டத்தில் ஆரம்பகாலத்தில் இருந்து ஈடுபட்டுவரும் அவரது ஆதரவாளர்களும், நண்பர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் இதுதொடர்பாக ஹர்திக் பட்டேலுக்கு ஒரு திறந்தமடலை கடிதமாக எழுதியுள்ளனர். அந்த கடிதத்தின் நகல் ஊடகங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு தலைவராக வேண்டும் என்ற உங்களது குறிக்கோளும், சுயநலமும், பணக்காரனாக மாற வேண்டும் என்ற ஆசையும் நமது சமுதாயத்தினருக்கும், போராட்டத்துக்கும் மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தி விட்டது.

பட்டேல் இன போராட்டத்தில் பங்கேற்று உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை செய்வதை விட்டுவிட்டு நீங்களும் உங்களது நெருங்கிய நண்பர்களும் ஆடம்பரமாக வாழ்ந்து வருவதை நமது சமுதாய மக்கள் வெகு நன்றாக அறிவார்கள்.

வழக்கமாக சிறைக்கு சென்று திரும்பியவர்கள் வாய்க்கும் கைக்குமான வாழ்க்கை செலவினங்களை ஈடுகட்ட முடியாமல் திண்டாடிவரும் நிலையில் நீங்கள் சிறைக்கு சென்றவுடன் கோடிஸ்வரனாக மாறி விட்டீர்கள். நீங்களும் உங்கள் உறவினர்களும் போராட்டத்துக்காக திரட்டப்பட்ட நிதியில் இருந்து சொகுசு கார்களை வாங்கி உல்லாசமாக சுற்றி வருகிறீர்கள்.

உங்களுடைய சர்வாதிகார மனப்போக்காலும், அணுகுமுறையாலும் ஒதுக்கீட்டை எதிர்பார்த்திருந்த எங்கள் கனவு கலைந்து போனது. சிறைக்கு சென்று திரும்பிய மாவீரனாக தனிப்பட்ட ஆதாயத்தை கருத்தில் வைத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்து தம்பட்டம் அடித்துவரும் நீங்கள், நாங்கள்கூட சிறைக்கு சென்றவர்கள்தான் என்பதை மறந்து விட்டீர்கள்.

இதைப்போன்ற நடைமுறைகளை நீங்கள் உடனடியாக கைவிடாவிட்டால், உங்கள் போராட்டம் தொடர்பான பல ’இருட்டு ரகசியங்களை’ விரைவில் அம்பலப்படுத்துவோம்.

மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top