வளர்ப்பு தந்தை பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிஜிஸ் ஆர்சிபால்டு. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என் தந்தை ஆலிவர் சமர் சில்பாலெட். தாயார் விர்ஜின் இனிகோ. 2000-ம் ஆண்டு என் தந்தை இறந்து விட்டார். இந்தநிலையில் 2002-ம் ஆண்டு என் தாயார் ஜெரால்டு ஞானரத்தினம் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். நான் ஏற்கனவே வாங்கி இருந்த பாஸ்போர்ட்டில் என் தந்தை பெயர் இருந்தது. என் தந்தை இறந்த பின்பு பெற்ற ஆதார் கார்டு மற்றும் கல்வி சான்றிதழ் போன்றவற்றில் என் வளர்ப்பு தந்தை ஜெரால்டு ஞானரத்தினம் பெயர் உள்ளது.

இந்தநிலையில் என் பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது. இதனால் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரும்படி மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன். “ஏற்கனவே நான் பெற்ற பாஸ்போர்ட்டில் என் தந்தை பெயர் உள்ளது. தற்போது நான் அளித்துள்ள விண்ணப்பம் மற்றும் ஆவணங்களில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டிய இடத்தில் வளர்ப்பு தந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கோர்ட்டில் உரிய உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க முடியும்“ என்று கூறி என் விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அதிகாரி 19.7.2016 அன்று நிராகரித்தார்.

இதை ரத்து செய்து விட்டு வளர்ப்பு தந்தை பெயரில் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வளர்ப்பு தந்தை பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் என்று கூறி மனுதாரரின் மனுவை 4 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top