ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி ஜெர்மனியை வீழ்த்தியது

ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி ஜெர்மனியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.

mm

ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. இதில் ஜெர்மனி அணியுடன் பிரேசில் மோதியது. இப்போட்டியைக் காண பிரபல தடகள வீரர் உசேன் போல்ட் உட்பட 78 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.

ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி பிரேசில் அணியின் கேப்டன் நெய்மர் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தின் இறுதியில் பிரேசில் அணி 1-0 என்ற முன்னிலையைப் பெற்றது. 2-வது பாதியில் ஆட்டத்தைச் சம நிலைக்கு கொண்டுவர ஜெர்மனி வீரர்கள் கடுமையாக முயன்றனர். 59-வது நிமிடத்தில் இதற்கு பலன் கிடைத்தது. ஜெர்மனியின் கேப்டன் மாக்ஸ் மேயர் ஒரு கோல் அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்கு கொண்டுவந்தார்.

இதைத்தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக போராடினாலும் யாராலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர இறுதியில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனாலிடி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் பிரேசில் அணி 5 – 4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றிக்கான கடைசி கோலை நெய்மர் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பிரேசில் அணி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை வென்றது. மேலும் உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணியிடம் தோற்றதற்கும் பிரேசில் அணி பதிலடி கொடுத்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top