கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது; திரை உலகத்தினர் வாழ்த்து

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது அந்நாட்டின் கலாசாரத்துறையால் வழங்கப்படுகிறது. சிறந்த நடிப்பு ஆற்றலுக்காக இந்த விருது கமல்ஹாசனுக்கு இந்த வருடம்  வழங்கப்படுகிறது.

kamal

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அறிவித்ததும் அவருக்கு திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை அவர் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வரும் கமல்ஹாசன், இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1975-ம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அவரது திரை வாழ்க்கையில், ‘16 வயதினிலே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘நீயா?’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘வாழ்வே மாயம்’, ‘மூன்றாம் பிறை’, ‘நாயகன்’, ‘தேவர் மகன்’, ‘அவ்வை சண்முகி’, ‘இந்தியன்’, ‘தசாவதாரம்’, ‘பாபநாசம்’ உள்ளிட்ட படங்கள் முக்கிய மைல் கல்லாக அமைந்தன.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கமல்ஹாசன் வெளிப்படுத்தி இருக்கிறார்.

50 ஆண்டுகள் திரைத்துறையில் காலடி பதித்துள்ள அவருக்கு, சிறந்த நடிப்புக்காக மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’, ‘பத்மபூஷண்’, மாநில அரசின் ‘கலைமாமணி’ போன்ற பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. இதுதவிர, தேசிய விருதை 4 முறையும், 19 முறை ‘பிலிம்பேர்’ விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

 

தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாசாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பு ஆற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

 

 

‘செவாலியே’ விருது பெற இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வரும் கமல்ஹாசன் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

 

ஏற்கனவே, இந்த ‘செவாலியே’ விருதை நடிகர் சிவாஜிகணேசன் 1995-ம் ஆண்டு பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

 

 

ஆனால், நடிகர் கமல்ஹாசனுக்கு விரைவில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் விழாவில் ‘செவாலியே’ விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்காக அவர் பிரான்ஸ் செல்ல இருக்கிறார்.

 

ஏற்கனவே, இந்தியாவில் ‘செவாலியே’ விருதை இந்தி நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

‘செவாலியே’ விருது பெறும் நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

 

பிரான்ஸ் அரசாங்கம் மிக உயர்ந்த விருதான செவாலியே விருதை மறைந்த சிவாஜிகணேசனுக்கு கொடுத்து கவுரவித்தது. அதேபோல், இன்று கமல்ஹாசனுக்கு ‘செவாலியே’ விருதினை அறிவித்துள்ளது. இதை தமிழ் திரை உலகிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக நாங்கள் கருதி மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

 

நடிகர் சிவாஜிகணேசனால் பலமுறை பாராட்டப்பட்ட கமல்ஹாசனுக்கு அதே ‘செவாலியே’ விருது கிடைத்திருப்பது சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சந்தோஷத்தை அளித்துள்ளது. ‘செவாலியே’ விருது பெற்ற சிவாஜிகணேசனுக்கு பெரும் விழா எடுத்து சிறப்பித்தது போல், கமல்ஹாசனுக்கும் மாபெரும் விழா எடுக்க விரும்புகிறோம். அவரை நேரில் சந்தித்த பிறகு இதுபற்றி முடிவு எடுக்கப்படும்.

 

‘செவாலியே’ விருது கிடைத்த கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அனைவரது சார்பிலும் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Scroll To Top