பா.ஜனதா மீது குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு வெங்கையா நாயுடு கடும் கண்டனம்

201608220629582926_Venkaiah-Naidu-blasts-Rahul-Gandhi-over-his-attack-on-BJP_SECVPF

பா.ஜனதா மற்றும் சங்க் பரிவார் அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகளை கூறிய ராகுல் காந்திக்கு, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பா.ஜனதாவும், சங்க் பரிவார் அமைப்புகளும் நாட்டில் வேற்றுமையை விதைப்பதுடன், பிரிவினையை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு பா.ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாதி, இனம், மண்டலம் மற்றும் மதரீதியிலான அரசியலை நீங்கள் (காங்கிரஸ்) நடத்தினீர்கள். தற்காலிக அரசியல் லாபத்துக்காக இனவாத அமைப்புகளுடன் நீங்கள் பலமுறை கூட்டணி வைத்திருக்கிறீர்கள். உங்களது இத்தகைய பிரித்தாளும் அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியல் நடவடிக்கைள் நமது நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியலால் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினரிடையே பிளவுதான் அதிகரித்தது. ஆனால் சிறுபான்மையினருக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் காங்கிரஸ் எந்த நன்மையும் செய்யவில்லை. இதுவே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் மரபு. இதனால் காஷ்மீர் பிரச்சினை சிக்கலானது.

இவ்வாறு பலவிதங்களில் இந்த வகுப்புவாத சக்திகளை ஆதரித்து விட்டு தற்போது எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள். மக்களின் மனதில் ஒற்றுமையை ஏற்படுத்த எந்த கவலையும் கொள்ளாத உங்களுக்கு, பா.ஜனதாவின் கொள்கைகளை குறை கூறுவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. பா.ஜனதா மீது நீங்கள் கூறும் குற்றச்சாட்டு பூமராங் போல உங்களை நோக்கியே திரும்பும்.

காஷ்மீரில் தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். அப்போது அது உங்களுக்கு சரியாக தோன்றியிருக்கிறது. ஆனால் மக்கள் ஜனநாயக கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்தால் அது இயற்கைக்கு மாறானதாக தோன்றுகிறதா?

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. விவகாரத்தில் அமைதியாக இருக்கும் நீங்கள், ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்க்கிறீர்கள். தேசியவாதிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் நீங்கள் தீவிரவாதிகளிடம் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறீர்கள். இதுதான் உங்கள் நிலைப்பாடு.

இவ்வாறு அந்த அறிக்கையில் வெங்கையா நாயுடு கூறி உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top