மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் பலத்த மழைக்கு 25 பேர் பலி

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது.

ஏற்கனவே 1 மாத காலமாக அங்கு மழை பெய்து வருகிறது. இப்போது பெய்த பலத்த மழையால் இரு மாநிலங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் மத்திய பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ள நிலமை மோசமாக உள்ளது.

அங்குள்ள முக்கிய நதிகளாக தமாஸ், சிம்ராவால், ஜோட்டா தமாஸ் ஆகியவற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. பல இடங்களில் வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது.

அங்குள்ள ரிவா நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநிலத்தில் கடந்த 3 நாளில் மழைக்கு 17 பேர் பலியாகி உள்ளனர். பாணியானிகாத் என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர்.

அங்குள்ள பெத்துவா ஆற்றை கடக்க முயன்ற ஜீப்பை வெள்ளம் அடித்து சென்றது. இதில் 2 பேர் பலியானார்கள்.

வெள்ள நிலமை மோசமாக இருப்பதால் மீட்பு பணிக்கு ராணுவம் வர வழைக்கப்பட்டு உள்ளது. ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். ரிவா நகரத்தில் இருந்து மட்டும் 1500 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

ஜாவா மற்றும் தியோதர் ஆகிய இடங்களில் ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இது வரை 4,215 பேரை ராணுவம் மீட்டு உள்ளது.

மீட்பு பணிகளுக்காக தேசிய மீட்பு படை 3 குழுக்கள் வந்துள்ளன. மேலும் மாநில மீட்பு படையை சேர்ந்த 12 குழுக்களும் இந்த பணிகளில் ஈடுபட்டு உள்ளது.

வெள்ள நிலமையை கட்டுப்படுத்துவதற்காக முதல்-அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மாநில அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அதில் ஊருக்குள் தண்ணீர் நுழைவதை தடுக்க அணைகளில் தண்ணீர் திறப்பை நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேசம் போலவே ராஜஸ்தான் மாநிலத்திலும் மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு 3 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொட்டலங்கள் போடப்படுகின்றன. மழைக்கு அங்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இருந்த 35 பேரை ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றினார்கள்.

கடந்த 2 நாளில் மட்டும் 30 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

உத்தரபிரதேசத்தில் கங்கை நதி உள்பட பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏராளமான கிராமம் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வெள்ள பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top