விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 245ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 245ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நெற்கட்டும் செவல், பச்சேரியில் உள்ள நினைவிடத்திலும், பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்திலும் பேரவைத் தலைவர் ப. தனபால், அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

55

சுதந்திரப் போராட்ட காலத்தில் மாவீரன் பூலித்தேவன் படையில் தளபதியாக இருந்து ஆங்கிலேயர்களின் பீரங்கி படையை அவர்களது பக்கமே திருப்பி அழித்த பெருமை ஒண்டிவீரனுக்கு உண்டு. திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள நெற்கட்டும் செவல் பகுதியை தலைமையாகக் கொண்டு ஒண்டிவீரன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்ததால் பாளையங்கோட்டையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற

வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு எதிரே 1.60 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு இங்கு ரூ.50 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்ட கடந்த 2011இல் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், கடந்த அதிமுக ஆட்சியில் குதிரையுடன் கூடிய ஒண்டிவீரனின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

ஒண்டிவீரனின் 245ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நெற்கட்டும் செவல், பச்சேரி கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் ப. தனபால், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல, பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.கருணாகரன், கோட்டாட்சியர் வெங்கடேஷ், எம்பி-க்கள் எஸ். முத்துக்கருப்பன், வசந்தி முருகேசன், கே.ஆர்.பி. பிரபாகரன், எம்எல்ஏ-க்கள் இன்பதுரை, மனோகரன் மற்றும் அதிமுக மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நான்குனேரி தொகுதி எம்எல்ஏ வசந்தகுமார், முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் கட்சியின் மாவட்ட,மாநில நிர்வாகிகள் பலர் பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில், எம்எல்ஏ ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மாவட்டச் செயலர் அப்துல் வகாப், அவைத் தலைவர் சுப. சீதாராமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆதித் தமிழர் பேரவை சார்பில் அதன் நிறுவனர் அதியமான் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆதித் தமிழர் கட்சியின் சார்பில் அதன் மாநிலத் தலைவர் ஜக்கையன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்ப் புலிகள் அமைப்பின் சார்பில், அதன் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாலை அணவித்து மரியாதை செலுத்தினர்.

இதபோல, பல்வேறு அமைப்புகள், கட்சியின் சார்பில் பாளையங்கோட்டை மணிமண்டபத்திலும், பச்சேரியில் உள்ள நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையொட்டி, இரு இடங்களிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top