சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ராம்குமாரின் தாயார் வழக்கு

201608200841079986_Swathi-murder-case-Ramkumar-mother-case-file-on-CB_SECVPF

சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று இந்த வழக்கில் கைதான ராம்குமாரின் தாயார், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், என்ஜினீயர் சுவாதி என்ற இளம் பெண் கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராம்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர்.

சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராம்குமாரின் தாயார் புஷ்பம் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:-

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த பயணிகள் பலர் செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார் கள். அப்போது அந்த பயணிகளை, சுவாதியை கொலை செய்த கொலைகாரர்கள் விரட்டியுள்ளனர். அந்த பயணிகளில் சிலர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று புகார் செய்துள்ளனர்.

சுவாதியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக போலீசார் பறிமுதல் செய்துள்ள அரிவாளில், யாருடைய கைரேகையும் இல்லை. இது, கர்நாடகாவில் பயன்படுத்தப்படும் அரிவாள் என்று போலீசார் கூறினார்கள்.

சுவாதிக்கு சொந்தமான 14 சிம் கார்டுகளையும், ஒரு லேப்டாப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதை சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்து, சுவாதியிடம் தொடர்புள்ளவர்களை பிடித்து விசாரித்தனர். இதில், பிலால் சித்திக் மீது சந்தேகம் கொண்டு, அவரை 4 நாட்கள் விசாரணை செய்துள்ளனர்.

இந்த கொலை வழக்கை 6 தனிப்படைகள் விசாரித்தன. அதில், ஒரு தனிப்படை, கர்நாடக மாநிலம் சென்று சில ஆதாரங்களை திரட்டியுள்ளது. அந்த ஆதாரங்களின் அடிப்படையில், காதல் மற்றும் சட்டவிரோத தொடர்புகளால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவருகிறது.

அதுமட்டுமல்லாமல், சுவாதி ஒரு முஸ்லிம் வாலிபரை காதலித்து திருமணம் செய்ததாகவும், மதம் மாறி ரம்ஜான் பண்டிகையின்போது, அவர் நோன்பு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கொலை நடப்பதற்கு 17 நாட்களுக்கு முன்பு சுவாதியை ஒருவர் ரெயில் நிலையத்தில் வைத்து தாக்கியதாக பயணி ஒருவர் பார்த்துள்ளார். இந்த வழக்கில், ஒட்டன்சத்திரம், மதுரை ஆகிய இடங்களில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுமட்டுமல்ல, தன் மகள் கொலை குறித்து தன் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரிக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சருக்கு சுவாதியின் தந்தை கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு அவர்கள் யாரும் ஒத்துழைக்கவில்லை.

சுவாதியின் தோழி ஒருவர் போலீசாரிடம் கூறும்போது, கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சுவாதியை ஒருவர் கடுமையாக தாக்கியதாகவும், அதை சுவாதி பொறுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

பெங்களூருவில் சுவாதி பணியாற்றியபோது, இன்போசிஸ் கம்பெனியின் ரகசியங்களையும், ராணுவ ரகசியங்களையும் விற்றுள்ளதாக பெங்களூரு தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவாதி கொலையில் என்னுடைய மகன் தவறாக அடையாளம் காட்டப்பட்டுள்ளான். மேலும், என் மகனை கைது செய்ய வந்த போலீசார், எங்கள் வீட்டை தட்டி, இது முத்துகுமார் வீடா? என்று கேட்டார்கள். உண்மை குற்றவாளிகளை பாதுகாக்க தமிழக போலீசார் முயற்சிக்கின்றனர். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top