விமான நிலையம் – சின்னமலை இடையே இந்த மாத இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை: அதிகாரிகள் தகவல்

201608190824395819_Airport-Chinnamalai-between-Metro-train-service-at-end-of_SECVPF

சென்னையில் முதல் கட்டமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி 2-வது வழித்தடத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

தற்போது முதல் வழித்தடத்தில், விமான நிலையம்- சின்னமலை இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளன. இம்மாத இறுதியில் சேவையை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

விமானநிலையம்- சின்னமலை இடையே விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு (ஓ.டி.ஏ.), ஆலந்தூர், கிண்டி, சின்னமலை ஆகிய ரெயில் நிலையங்கள் வருகின்றன. சுமார் 9 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் நாயக் குழுவினருடன் கடந்த மாதம் 29 மற்றும் 30-ந்தேதிகளில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு பணியின் போது, அரை கிலோ மீட்டருக்கு ஒரு முறை டிராலியை நிறுத்தி தண்டவாளத்தில் இறங்கி அதன் உறுதித்தன்மையை நவீன கருவிகளின் உதவியுடன் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். அந்த பாதையில் பிரமாண்டமான முறையில் கத்திப்பாரா மேம்பாலத்திற்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ‘ஹேண்டி லிவர்’ உயர்பாலத்திலும், கிண்டியில் மின்சார ரெயில் பாதையை கடந்து செல்லும் ராட்சத இரும்பு பாலத்தையும் ஆய்வு செய்தார். இந்த பாதையில் நடந்துள்ள பெரும்பாலான பணிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதேநேரம், ரெயில் தண்டவாளங்கள், வழித்தட வரைபடம், கட்டிடங்கள், சிக்னல்கள், பயணிகளுக்கான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், ரெயில்கள் ஆய்வு போன்ற அம்சங்களில் ஒரு சில தவறுகளை சுட்டி காட்டியிருந்தார். அவற்றை உடனடியாக சரி செய்யவும் அறுவுறுத்தியிருந்தார். அவை அனைத்தும் கடந்த 15 நாட்களில் சரி செய்யப்பட்டு விட்டன.

தொடர்ந்து இந்தப்பாதையில் மேலும் கூடுதலான பாதுகாப்புடன் ரெயில்களை இயக்குவதற்காக தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஆணையரும் பயணிகள் பயணம் செய்யும் ரெயிலை இந்தப்பாதையில் இயக்கலாம் என்று கூறி முறைப்படியான சான்றிதழை வழங்கி உள்ளார். அதேநேரம் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் அறிக்கையை அனுப்பி உள்ளார். எனவே மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலை பெற்று இம்மாத இறுதியில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து ஆலந்தூர்- பரங்கிமலை பறக்கும் பாதையில் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்தப்பாதையில் பாதுகாப்பு ஆணையர் செப்டம்பர் மாதம் ஆய்வை முடித்து, வரும் அக்டோபர் மாதம் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.

அதேபோல் கோயம்பேடு – திருமங்கலம் பறக்கும்பாதை மற்றும் திருமங்கலம் – ஷெனாய் நகர் இடையே சுரங்கப்பாதையில் பணிகள் முழுமையாக முடிந்து அந்தப்பாதையிலும் இரவு பகலாக சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஷெனாய் நகர் – நேருபூங்கா- எழும்பூர் இடையே பணிகள் இம்மாத இறுதியில் நிறைவடைய உள்ளது. தொடர்ந்து இந்தப்பாதையிலும் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு முடிந்த உடன் இந்த ஆண்டு இறுதியில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top