3 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் இடைத்தேர்தல்: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
3-assembly-constituencies-in-October-elections-announcement_SECVPF
அந்த தேர்தலின் போது வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் வந்ததால் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து சட்ட சபைக்கு தேர்வான அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்கும் முன்பே அவர் மரணம் அடைந்தார்.

இதன் காரணமாக தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்த மூன்று தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தலைமை தேர்தல் கமி‌ஷன் நடத்தை விதிப்படி இந்த 3 தொகுதிகளிலும் வரும் நவம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். எனவே தேர்தல் அதிகாரிகள் எப்போது இடைத்தேர்தலை நடத்தலாம் என்று ஆய்வு செய்து வருகிறார்கள். அக்டோபர் மாதம் 2-வது வாரம் இடைத் தேர்தலை நடத்தலாமா என்று கருத்து கேட்டுள்ளனர்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபர் மாத இறுதியில் முடிகிறது. எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மூன்றாவது வார இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

அக்டோபர் மாதம் ஆயுத பூஜை, முகரம், தீபாவளி, கந்த சஷ்டி ஆகிய திருவிழாக்கள் வர உள்ளதால் அதற்கு ஏற்ப 3 தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்ய வேண்டிய நிலை தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவ மழை சீசன் தொடங்கிவிடும் என்பதால் அதுவரை இடைத்தேர்தல் நடத்தும் தினத்தை கொண்டு செல்ல இயலாத நிலை உள்ளது.

எனவே தற்போதைய சூழ்நிலையில் அக்டோபர் மாதம் 2-வது வாரம் தான் உகந்ததாக இருப்பதாக தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் கருதுகிறார்கள். ஆகையால் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பே 3 தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

தற்போது தமிழக சட்ட சபை கூட்டத் தொடர் நடந்து வருவதால் 3 தொகுதி இடைத்தேர்தல் அட்டவணையை அறிவிக்க முடியாது. சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி முடிகிறது.

அதன் பிறகு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளிடம் கலந்து ஆலோசித்து விட்டு தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் கமி‌ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். எனவே செப்டம்பர் முதல் வாரம் இடைத்தேர்தல் தேதி விபரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top