கர்நாடக மாநில அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு வைகோ  டாக்டர் ராமதாஸ்,  தி.வேல்முருகனும்ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Karnataka-State-Government-Dr-Ramadoss-Vaiko-condemned_SECVPF
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாது, ராசிமணலில் தடுப்பு அணைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி இருப்பதும், கர்நாடக மாநில அரசின் சட்ட மீறலையும், அடாவடித்தனத்தையும் கண்டு கொள்ளாமல் நரேந்திர மோடி அரசு மவுனம் சாதித்து வருவதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசின் நயவஞ்சகச் செயலையும், அதற்கு துணை போகின்ற மத்திய அரசையும் வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
கர்நாடகாவின் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்திடவும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக்குழு அமைத்திட வலியுறுத்தியும் 19-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் முழு கடையடைப்பு, சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் ம.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும், வர்த்தகர்களும் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரூ.5,912 கோடி நிதி ஒதுக்கீடு
கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாயில் கட்டப்படும் என்றும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அம்மாநில முதல் மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நடந்த சுதந்திரதின விழாவில் கூறி இருக்கிறார்.
பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காகவே மேகதாது அணை கட்டப்படுவதாக கர்நாடக அரசு கூறி வந்தது. ஆனால், இப்போது மேகதாது அணையில் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.
மேகதாது அணை கட்டுவது மட்டுமின்றி, பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ் நகர், தும்கூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 490 ஏரிகளில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கான திட்டத்தை ஆயிரத்து 885 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்போவதாகவும் சித்தராமையா கூறியிருக்கிறார்.
மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்
49 டி.எம்.சி கொள்ளவுள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மட்டுமே இருக்கும் காலத்திலேயே தமிழகத்திற்கு உரிய அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது அதைவிட அதிகமான அளவு தண்ணீரை தேக்கிவைக்கும் அளவுக்கு புதிய அணை கட்டப்படுவதுடன், சுமார் 500 ஏரிகளிலும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால், தமிழகத்திற்கு ஒரு சொட்டுக்கூட தண்ணீர் கிடைக்காது. அதன்பின் காவிரி ஆறு இன்னொரு பாலாறாக மாறி, தஞ்சை பாசன பகுதிகள் பாலைவனமாக மாறிவிடக்கூடும்.
எனவே, மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் அரசியல் ரீதியாக அழுத்தம் தருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் இப்பிரச்சினை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி கடந்த ஆண்டு ஜூன் 9-ந் தேதி டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு எழுதிய கடிதத்தில் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதி அளிக்காது என கூறியிருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடகம் எப்போது தாக்கல் செய்தாலும் அதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகனும், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top