புதிய கல்விக் கொள்கையும் மீண்டெழும் குலக்கல்வி முறையும்

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு நெடுங்கிலும் பெரும்பான்மை சமூகத்திற்கு கல்வி என்பது மறுக்கபட்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. வேத கல்விமுறை, குருகுல கல்விமுறை எனப்படும் அந்த கல்விமுறையில் பிறப்பின் அடிப்படையிலே ஒருவருக்கு கல்விகற்கும் தகுதி நிர்ணயிக்க படும். அந்த கல்விமுறையில் பெண்களுக்கு கல்வி முற்றிலும் மறுக்கபட்டது. இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகத்துக்கு சாவித்திரி புலே, அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களின் பெரும் போராட்டத்திற்கு பிறகே நமக்கு கல்வி கிட்டியது. நம்மில் பலரும் இந்த வரலாறு தெறியாதவர்கள் தான். ஏன் என்றால் நம் கல்வித்திட்டத்தில் கல்வி மறுக்கப்பட்டது பற்றியோ அல்லது அதுக்கு நடந்த போராட்டங்கள் பற்றியோ பாடங்கள் இருப்பது இல்லை.

4

பெருபான்மையான சமூகத்துக்கும், பெண்களுக்கும் கல்வியை மறுத்த வேத கல்வியை போற்றிப்பாடியே “தேசிய கல்வி கொள்கைக்கான உள்ளீடு வரைவு 2016” முன்னுரை (Preamble) தொடங்குகிறது. மோடி அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து கல்வி நிறுவனங்களின் இந்துத்துவத்துக்கு எதிரான ஜநாயக சக்திகளை ஒடுக்குவது, கல்வி நிறுவனங்களில் உயர் பதவியில் இந்துத்துவ ஆட்களை அமரவைப்பது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். கல்வித்துறையை தங்கள் கட்டுப்பாட்டினில் வைத்துக்கொள்வதில் இந்துத்துவம் என்றுமே முனைப்புடன் இருந்து வந்துருக்கிறது, இருந்தும் வருகிறது. அப்படிப்பட்டவர்கள் தான் இன்று புதிய தேசிய கல்வி கொள்கைக்கான உள்ளீடு வரைவை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்தியா பல தேசிய இனங்களை கொண்டுள்ள நாடு. பல மொழிகளையும், கலாச்சாரங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தங்கள் இன அடையாளங்களையும், மொழியையும், கலாச்சாரங்களையும் பின்பற்றவும், காக்கும் உரிமையும் உண்டு. அதே போல் அனைவருக்கும் அவரவர் தாய் மொழியில் கல்வி கற்பதற்கான உரிமையும் உண்டு. அனால் இப்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆரம்பக்கல்வி மட்டுமே தாய்மொழியில் கற்பிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது ஆரம்ப கல்விக்கு பிறகு தாய்மொழி கல்வி இல்லை என்பது ஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் மட்டுமின்றி இந்தியாவின் பன்முகங்களை ஒற்றை அடையாளங்களின் கீழ் கொண்டு வரும் இந்துத்துவத்தின் லட்சியமான இந்து நாட்டை  அமைப்பதற்கான செயல் திட்டங்களில் முக்கியமான ஒன்றாகும்.

தாய்மொழிக் கல்வியை மறுப்பதோடு மட்டுமல்லாமல் இந்த வரைவு மும்மொழிக்கொள்கையை வலியுறுத்துகிறது. அந்த மூன்றாவது மொழி எது என்பதை மாநில அரசாங்கம்  அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு முடிவு செய்யும் என்றும் கூருகிறது. அதே தலைப்பில் (Language and Cultural Education), இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும், இந்திய கலாச்சார ஒற்றுமைக்கு சமஸ்கிருதத்தின் பங்களிப்பை கணக்கில் கொண்டு  சமஸ்கிருதத்தை கற்றுத்தருவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. அப்படியென்றால் மூன்றாவது மொழி என்று இவர்கள் குறிப்பிடுவது எது என்று நமக்கு விளங்குகின்றது. அது மற்றுமின்றி எதன் அடிப்படையில் இவர்கள் இந்தியாவில் உள்ள கலாச்சாரங்களுக்கும் மொழிகளுக்கும் சமஸ்கிருதம்  பங்களித்தது என்று கூறுகிறார்கள். ஒரு மொழிக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து கொடுப்பதை நாம் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மோடி அரசு ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது, ஆசிரியர் தினம் போன்ற பொதுவான தினங்களுக்கு சமஸ்கிருத பெயர்கள் வைப்பது போன்ற வேலைகளை நாம் இந்த தருணத்தில் நினைவு கூற வேண்டும். ஆரம்ப கல்விமுதல் ஆராய்ச்சி கல்விவரை அவரவர் தாய்மொழியில் தரவேண்டியது ஒரு அரசாங்கத்தின் தலையாய கடமை. அதை இந்திய அரசு மறுப்பது என்பது இந்தியாவின் மக்களுக்கு எதிரானது.

கல்விக்கொள்கைக்கான வரைவை வெளியிட்டுள்ள இதே தருணத்தில் டிசம்பர் மாதம் நைரோபியில் நடந்த உலக வர்த்தக கழக மாநாட்டை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உணவுக்கான மானியங்களை நிறுத்துதல், விவசாயிகளிடம் இருந்து உணவு பொருட்களை கொள்முதல் செய்வதை நிறுத்துதல், ரேஷன் கடைகளை மூடுதல் என மக்கள் விரோத சரத்துகளை கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா கையெழுத்து இட்டது. அதில் கல்வி சம்மந்தமாக இருந்த சரத்துகளில் முக்கியமானதை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தங்கள் நாட்டில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்பது நைரோபிய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய சரத்து. அதை இந்த வரைவும் முன்வைக்கின்றது  “உலகளவில் உள்ள முதல் 200 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் தங்கள் இருப்பை நிறுவ ஊக்குவிக்கபடும். தேவைபடும் எனில் இந்திய அரசியல் சட்டதிட்டத்தில் அதற்குரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என்று கூறுகிறது. கல்வியில் வெளிநாட்டு முதலாளிகளுக்காக திறந்துவிட சொல்கிறது இந்த வரைவு அறிக்கை.

கல்வியென்பது அடிப்படைஉரிமை என்ற நிலையை தாண்டி ஆடம்பர பொருளாக மாற்றப்பட்டு வருகிறது. மக்களுக்கு கல்வியை அளிக்கும் பொறுப்பில் இருந்து மெதுவாக விலகிக்கொண்டு இருந்த அரசாங்கம் இந்த வரைவில் அடுத்த கட்டத்திற்கு சென்று, அரசாங்கம் இனி புதிய கல்வி நிறுவங்களை தொடங்காது என்றும் குறிப்பிட்டுள்ளது. “புதிய நிறுவங்கள் அமைக்க பெரும் நிதி தேவைப்படும் என்பதால், இருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கம் செய்யப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் “தனியார் மற்றும் தொண்டு நிறுவங்கள் கல்விதுறையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கப்படும்” என்கிறது. அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும், மல்லையாக்களுக்கும் பல்லாயிரம் கோடி கடன்களை, வரிசலுகைகளை தர இந்த அரசிடம் உள்ள பணம் ஏனோ கல்வி நிறுவங்களை உருவாக்க இருப்பதில்லை. கல்வியை ஒரு பண்டமாக மாற்றி அதை தனியாரிடம் ஒப்படைத்து அதை ஒருவருக்கு கிட்டாதபடி இந்த அரசு செய்கிறது. கல்வி என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. அதை அளிப்பதே அரசின் கடமை. அதை தனியாரிடம் ஒப்படைப்பது என்பதை ஒருபொழுதும், எவராலும் ஏற்க முடியாத ஒன்று.

கல்வியை தனியாரிடம் கொடுப்பதோடு இந்த வரைவு நின்றுவிடவில்லை. அரசின் உயர்கல்வி நிறுவங்களின் வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகளை கண்டறிய வேண்டும் என்கிறது. அதற்கு ஒரு வழியாக கல்வி கட்டணத்தை உயர்த்த பரிந்துரை செய்கிறது. அதுமட்டும் இன்றி கல்விக்கடன் பற்றி கூறுகையில் கடனுக்கான வட்டியை குறைக்கப்பட வேண்டும் மற்றும் அதை திரும்ப செலுத்துவத்துவதற்கான காலத்தை நீடிக்கவேண்டும் என்று கூறுகிறது. அனால் நடைமுறையில் கல்விக்கடன் சம்மந்தமாக அரசின் விதிமுறைகளை எந்த வங்கியும் பின்பற்றுவது இல்லை. அதுமட்டும் இன்றி கடன்களை வசூலிக்கும் உரிமையை ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களிடம் வங்கிகள் ஒப்படைத்து வருகின்றது. சமீபத்தில் நடந்த மதுரை பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை நாம் மறந்துவிட முடியாது. இந்த நிலையில் ஒரு பக்கத்தில் தனியாரிடம் கல்வித்துறையை ஒப்படைப்பது, அரசு நிறுவனங்களின் கல்வி கட்டணத்தை உயர்த்துவது என்று கல்வியை மாணவர்களுக்கு எட்டா கனியாக்கி அதை அடைய வேண்டும் என்றால் மாணவர்கள் கடனாளி ஆகவேண்டும் என்ற நிலையை திட்டமிட்டு உருவாக்குகிறது. இது இன்னும் பல லெனின்களை உருவாக்க கூடும்.

மாணவர்களை தரம் பிரிக்கும் கல்வி என்பது ஒரு ஏற்புடைய கல்விமுறை  அல்ல. இதுவரை எட்டாம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி என்று இருந்ததை ஐந்தாம் வகுப்பு என்று குறைத்துள்ளது. ஆறாம் வகுப்பிற்கு பிறகு அவர்கள் இரண்டு முறை தேர்ச்சி அடையவில்லை என்றால் அவர்கள் தொழிற்கல்வி தேர்ந்தெடுக்க  ஆலோசனை வழங்கப்படும் என்று கூறுகிறது. சில நாட்களுக்கு முன் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு மாற்றத்துடன் இதை பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது. அந்த திருத்தத்தில் குழந்தைகள் தங்கள் குடும்ப தொழிலில் ஈடுபடலாம் என்று திருத்தும் கொண்டுவரப்பட்டது. ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு தொழில் கல்வி என்று கிராமப்புற மாணவர்களுக்கு இந்த வரைவு முன்வைப்பது என்பது குடும்ப தொழிலாகவே இருக்க முடியுமே தவிர பொறியியல் சம்மந்தமான தொழில் முறை கல்வியாக இருக்க இயலாது. இதன் மூலம் ஒரு நவீன குலக்கல்வி திட்டத்தை தான் இந்த வரைவு முன்மொழிகிறது.

பத்தாம் வகுப்பில்  “Part – A” “Part – B” என்று இரண்டு பிரிவுகளை முன்வைக்கிறது. முதல் பிரிவில் அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்கள் இடம் பெரும். பத்தாம் வகுப்பிற்கு பிறகு தொழிற்கல்வி போக விரும்பும் மாணவர்கள் இந்த முதல் பிரிவை தவிர்த்து “part – B” இரண்டாம் பிரிவை தேர்ந்து எடுக்கலாம் என்று கூறுகிறது. ஒரு மாணவரை கல்விமுறை முழுவதிலும் தரம் பிரிப்பதும், தொழிற்கல்விக்கு துரத்துவதிலும் இந்த வரைவு பல இடங்களில் முன்வைக்கின்றது. “Part – A” “Part – B” எனும் பிரிவின் மூலம் ஒரு மாணவன் தான் தேர்ந்தெடுத்த பிரிவில் இருந்து எதிர்காலத்தில் மாறவே இயலாது என்பது குறிப்பிடதக்கது.

சுபிரமணியம் குழு அளித்த அறிக்கையின் படியே இந்த வரைவு தயாரிக்கப்  பட்டுள்ளது. சுபிரமணியம் குழு அளித்த அறிக்கையில் கல்வி நிறுவனங்களில் அரசியல் செயல்பாடுகள் இருக்க கூடாது என்றும் மாணவ இயக்கங்களை அனுமதிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வரைவில் வெளியாட்களும் மற்றும் படிப்பு காலம் முடிந்து கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களும் தான் கல்வி நிறுவனங்களில் சில சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறுகிறது. சமீப காலங்களில் இந்துத்துவத செயல்பாடுகளுக்கும், அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கும் எதிராக மிகவும் தீர்க்கமான போராட்டங்களை மாணவர் இயக்கங்களே முன்னேடுத்தது. அப்பொழுது அந்த மாணவர் இயக்கங்களின் மேல் கூறப்பட்ட பொய்கள் இவைகள். மாணவர் இயக்கங்களை முடக்கியே தீரவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். சில மாதங்களுக்கு முன் UGC மாணவர்கள் பாதுகாப்பு குறித்தான வழிகாட்டு நெறிகள் என்ற ஒரு  அறிக்கையை வெளியிட்டது.  அதில் கல்லூரி வளாகங்களுக்குள்  காவல் நிலையங்களை அமைக்க வேண்டும், வளாகங்களில் CCTV கேமரா பொறுத்த பட வேண்டும் என்று பல சரத்துகளை கூறி இருந்தது. பிறகு மாணவர்களின் எதிர்ப்பால் அது இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அதே போல மாணவர்களை ஒன்றிணையாமல் தடுப்பதிலும் அவர்களை கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க வேண்டும் என்று இந்த அரசு உறுதியாய் இருக்கிறது.

இந்த வரைவு முழுவதிலும் கல்வியை ஒரு நிறுவன பிரச்சனையாகவே அணுகியுள்ளது. தொழில்நுட்ப உதவியால் இந்த நிறுவன சிக்கலை சரி செய்து விடலாம் என்கிறது. அனால் கல்வியில் உள்ள முக்கிய பிரச்சனைகளை இந்த வரைவு பேசவே இல்லை. முக்கியமாக தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை பற்றி இந்த வரைவு கண்டுகொள்ளவே இல்லை. மாறாக பல புதிய தேர்வுகளை இந்த வரைவு முன்வைக்கின்றது. அதே போல தனியார் கல்வி நிறுவனங்களில் இருக்கும் மனித தன்மையற்ற சட்டங்களை பற்றியும் இதில் ஏதும் கூறப்படவில்லை. உச்சக்கட்டமாக இந்த சமூகத்தில் அதிகரித்து வரும் மாணவர்கள் கொலைகளை பற்றியும், கல்விநிறுவனங்களில் நிலவும் தீண்டாமை பற்றியும் ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை.

நாம் அனைவரும் நம் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்திலாவது இந்த கல்விமுறை மாறவேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால் இந்த கல்விமுறை இப்பொழுது உள்ளதை விட மோசம் அடைய போகிறது. மாணவர்களை கற்றலின் அடிப்படையில் இனி தரம்பிரிக்க போகிறார்கள். தாய்மொழிவழி கல்வி மறுக்க படப்போகிறது. கல்வி மிகவும் ஆடம்பர பொருளாக மாறப் போகிறது. மாணவர்களை இது மிக பெரும் கடனாளியாக மாற்ற போகிறது. இதுக்கு எதிராக, மாணவர் நலன்காக்க இருக்கும் மாணவர்கள் இயக்கம் ரத்து செய்யப்பட போகிறது. முழுதும் கல்வி தனியார்மயம் ஆக்கப்பட்ட ’சிலி’ நாட்டில் இலட்சம் மாணவர்கள் வருடக்கணக்கில் போராடிவருகிறார்கள். அமெரிக்கா போன்ற மாநிலங்களில் மாணவர்களின் கல்வி கடனை தங்கள் இளைமை காலம் முழுதும் செலுத்தி கொண்டு இருக்கிறார்கள். ஏதிர்பாராத விதமாக மாணவன் இறந்துவிட்டால் அவர்கள் பெற்றோர் அந்த கடனை செலுத்த கட்டாயப்படுத்த படுகிறார்கள். நமது அடுத்த தலைமுறை நாளை இதை போன்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட போகிறார்கள். அதற்கு இடம் அளிக்காமல் நாம் இன்றே தடுத்திடுவோம். கல்வி என்பது அடிப்படை உரிமை, ஆரம்ப கல்விமுதல் ஆராய்ச்சி கல்விவரை தாய்மொழியில் இலவசமாக வழங்கிடு என்று இந்த அரசுக்கு உரக்க கூறுவோம்.

செ. நந்தகுமார்,

பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top