ராமஜெயம் கொலை வழக்கு:கொலையாளியை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு 8–வது முறையாக கால அவகாசம்

rama

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 8–வது முறையாக மதுரை ஐகோர்ட்டு கால அவகாசம் வழங்கி உள்ளது. அக்டோபர் மாதம் 17–ந் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 29.3.2012 அன்று திருச்சியில் கொலை செய்யப்பட்டார். ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்காததால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று ராமஜெயத்தின் மனைவி லதா மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஒவ்வொரு முறை விசாரணைக்கு வந்த போதும் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், குற்றவாளிகளை பிடிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கோரப்பட்டது. அதன்பேரில் ஏற்கனவே 7 முறை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஐகோர்ட்டு கால அவகாசம் வழங்கியது.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி பி.தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஆஜராகி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கந்தசாமி, ‘விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க 4 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும்‘ என்றார்.

லதா ராமஜெயம் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.ரவி, “கொலை சம்பவம் நடந்து 4¼ ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 1½ ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஒவ்வொரு முறையும் 4 மாதம் கால அவகாசம் கேட்டு வழக்கை இழுத்தடிக்கின்றனர். எனவே, கால அவகாசம் வழங்கக்கூடாது. வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்“ என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மேலும் 2 மாதம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை அக்டோபர் மாதம் 17–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top