‘பரஸ்பர விவாகரத்துக்கு காரணம் தேவையில்லை’ மதுரை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

madurai court

‘‘பரஸ்பர விவாகரத்துக்கு காரணம் தேவையில்லை’’ என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். நெல்லை தியாகராஜநகரைச் சேர்ந்தவர் சத்தியபாமா. இவர்களுக்கு கடந்த 20.5.2013 அன்று திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பரஸ்பரமாக விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்த அவர்கள் இருவரும் நெல்லை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பர விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

பரஸ்பர விவாகரத்துக்கு காரணம் தெரிவிக்கவில்லை என்று கூறி அவர்களது மனுவை தள்ளுபடி செய்து 5.3.2016 அன்று நெல்லை கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் இருவரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜரானார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–

“பரஸ்பர விவாகரத்து கோரும்போது மனுதாரர்கள் இருவரும் தனித்தனியாக வாழ்வது சரியானதாக இருக்குமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. அவர்கள் விவாகரத்து பெற ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம். காரணத்தை தெரிவிக்கவில்லை என்பதற்காக பரஸ்பர விவாகரத்து கோரும் மனுவை நிராகரிக்க முடியாது.

மனுதாரர்கள் இருவரும் தங்களால் சேர்ந்து வாழ முடியாது என்று மனதளவில் முடிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும். பரஸ்பர விவாகரத்தை தடுக்கும் வகையில் சட்டம் இல்லை.

பரஸ்பர விவாகரத்துக்கு காரணம் தேவையில்லை. நெல்லை கோர்ட்டு இந்த விவகாரத்தில் சரியான முடிவை எடுக்கவில்லை. எனவே, நெல்லை கோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு பரஸ்பர விவாகரத்து வழங்கப்படுகிறது.“

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top