திருச்சியில் இருந்து சென்னைக்கு ரூ.382 கோடி கொண்டு செல்ல இருந்த மேலும் ஒரு ரெயில் பெட்டி ஜன்னலில் துளை

201608110731180497_From-Trichy-to-Chennai-Rs-382-crore-was-to-go-into-hole-in_SECVPF

சென்னையில் இருந்து 8-ந்தேதி இரவு புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சிக்கு ஒரு பெட்டியில் ரிசர்வ் வங்கி மூலமாக ரூ.300 கோடிக்கு மேல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பணப்பெட்டிகள் திருச்சி மற்றும் மற்ற மாவட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி வைக்க தயாராக இருந்தன.

சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் ரிசர்வ் வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் பரவியதால் திருச்சியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு வங்கிகளுக்கு பணத்தை பாதுகாப்புடன் வேனில் கொண்டு சென்று வினியோகித்தனர்.

இந்நிலையில் திருச்சி, கும்பகோணத்தில் உள்ள 6 வங்கிகளில் சேகரிக்கப்பட்ட கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்புவதற்காக மரப்பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டன. மொத்தம் 216 மரப்பெட்டிகளில் ரூ.382 கோடி இருந்தது. இந்த மரப்பெட்டிகளை ரெயில் பெட்டியில் வைத்து அதனை மங்களூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரெயிலில் இணைக்க பாதுகாப்பு போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

பணம் அனுப்பும் பெட்டியை சென்னையில் இருந்து வந்திருந்த ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரிப் பாட்ஷா தலைமையிலான போலீசார் பார்வையிட்டனர். அப்போது அந்த பெட்டியில் உள்ள ஜன்னலில் சிறிதளவு வெட்டப்பட்டு துளை இருந்தது. இதனை கண்ட பாதுகாப்பு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

திட்டமிட்டு ஜன்னல் சேதம் செய்யப்பட்டதா? என பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே வேறு பெட்டியை ஏற்பாடு செய்து தரக்கோரி ரெயில்வே அதிகாரிகளிடம் போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் இதற்கு மறுத்ததால், வேறு பெட்டி மாற்றிக்கொடுத்தால் மட்டுமே பணத்திற்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதையடுத்து வேறு பெட்டியை ரெயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அந்த பெட்டி முழுவதையும் போலீசார் பார்வையிட்டனர். அதன் பின்னர் பணம் இருந்த மரப்பெட்டிகளை ரெயில் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு கதவுகளுக்கு ‘சீல்’ வைத்தனர். அந்த பெட்டி முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்ஷன் நிலையத்திற்கு 3-வது நடைமேடைக்கு இரவு 10 மணிக்கு வந்தது. இதையடுத்து சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பும் பணம் இருந்த ரெயில் பெட்டி, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் என்ஜினுக்கு அடுத்து இணைக்கப்பட்டது. ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரெயிலில் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

இந்த ரெயில் நேற்று அதிகாலை எழும்பூர் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடைக்கு வந்தது. பின்னர் பணம் வைக்கப்பட்டு இருந்த பெட்டி மட்டும் பார்சல் அலுவலகம் அருகே உள்ள ‘டிராக்’ கில் நிறுத்தப்பட்டது.

அங்கிருந்து தள்ளுவண்டிகள் மூலம் பணப்பெட்டிகள் வேனில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top