வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை

ramakrishnan

வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியீட்டு உள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் குறித்து கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தமும், அதையடுத்து வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பும் 60 நாட்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக எம்.பி.க்களால் பாராளுமன்றத்தில் இப்பிரச்சினை எழுப்பப்பட்டது. நேற்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைச் சந்தித்து இந்த சட்டத்தை கைவிட வேண்டுமெனவும், 126 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதை திரும்ப பெற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர குழு அமைக்கப்படும் என சட்ட அமைச்சர் அறிவித்தார். ஆனால் இதுவரையிலும் மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சினையில் தலையிட்டு சுமுகமான முடிவுக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலை நீடிப்பதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக பிணை மனுக்கள் கொடுக்க முடியாததால் பல பேர் எவ்வித நியாயமுமின்றி சிறையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறையிலிருப்போர் பிணை மனுக்களை சிறை அதிகாரி மூலம் அனுப்பலாம் என நீதிமன்றம் வழிகாட்டியிருப்பதாக தெரிகிறது. ஆனாலும் சில நாட்களில் வெளியே வர வேண்டியவர்கள் பல வாரங்கள் சிறையில் துயரப்படும் நிலையையே இது உருவாக்கும்.

இக்காலத்தில் பல வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. வேறு வழியின்றி நீதி கோரி நீதிமன்றத்தை அணுகியவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் இது. நேரடியாக மனுதாரரையே ஆஜராக சொல்வது உரிய நிவாரணத்தை பெற்றுத் தந்து விடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதே போன்று சிவில் வழக்குகளில் உடனடி இழப்புகளை தடுக்கும் பொருட்டு ‘சிவில் சூட்’ வழியை நாடுவோருக்கும் அந்த உரிமை இந்தக் காலத்தில் மறுக்கப்பட்டிருக்கிறது.

பல வழக்குகளில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ற நிலையிலிருந்து போராட்டங்களை அணுகும் நீதிமன்றங்கள் தன்னையும் உள்ளடக்கிய ஒரு பிரச்சினை இரண்டு மாத காலத்திற்கு மேலாக தீர்வு எட்டப்படாமல் இருப்பதில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல.

பொதுமக்களின் சிரமங்கள், தேங்கும் வழக்குகள், மக்களின் வரிப்பணம் விரயமாவது ஆகியவற்றை கணக்கில் கொண்டு நீதிமன்றம் உடனடியாக இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் உத்தேச சட்டத்திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதோடு, போராடும் வழக்கறிஞர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சென்னை உயர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்கிறது.

மேலும் மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சனையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர உரிய முறையில் தலையிட வேண்டும்” என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top