கல்விக் கடனை திருப்பிச் செலுத்து மாறு கெடுபிடி செய்ய வேண்டாம் என வங்கிகளுக்கு அறிவுரை கூறி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி) கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் நேற்று உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
கல்விக் கடனை வசூலிக்க வங்கிகள் கெடுபிடி செய்து வருகின்றன. கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. தற்போது கடனை திருப்பிச் செலுத்துமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கல்விக் கடன் பெற்ற இளைஞர்களிடம் கெடுபிடி செய்து வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட லெனின் என்ற இளைஞர் மதுரையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்விக் கடனை வசூலிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கிய சலுகையை மாணவர்களுக்கே வங்கிகள் வழங்கலாம்.
தமிழகம், கேரளத்தில்தான் அதிக அளவு கல்விக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் இது போல வங்கிகள் கெடுபிடி செய்த போது வங்கிகளுக்கு அறிவுரை கூறி அந்த மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகே வங்கிகளின் கெடுபிடி குறைந்தது. கேரளத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவை யிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கெடுபிடி செய்யும் வங்கிகள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும்.