ஆந்திராவில் தலித் சகோதரர்கள் மீது கொலை வெறி தாக்குதல்: பசு காவலர்களின் அராஜகம்

201608101000225506_Dalit-brothers-Stripped-beaten-in-Andhra-for-skinning-dead_SECVPF

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரம் அருகேயுள்ள உப்பலாப்புரம் கிராமத்தில் சமீபத்தில் ஒரு பசுமாடு மின்சாரம் தாக்கி இறந்தது. அதை புதைப்பதற்காக அதேபகுதியை சேர்ந்த மோகட்டி ஈயய்யா மற்றும் அவரது சகோதரரான கோஹட்டி வெங்கடேஷ் நேற்று சிலர் அழைத்து வந்தனர்.

அந்தப் பசுவை புதைக்கும் வேலை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உள்ளூர் போலீசில் தடையில்லா சான்றிதழ் பெற்று, இறந்த பசுவின் உடலை ஒரு வாகனத்தில் புதைக்கும் இடத்திற்கு அவர்கள் ஏற்றிச் சென்றனர்.

உடன்பிறந்த சகோதரர்களான மோகட்டி ஈயய்யா மற்றும் அவரது சகோதரரான கோஹட்டி வெங்கடேஷ்  இருவரும் புதைப்பதற்கு முன்னர் அந்தப் பசுவின் தோலை உரித்து கொண்டிருந்தபோது, இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்துசேர்ந்த ‘பசு பாதுகாவலர்கள்’ அமைப்பினர், அந்த தலித் சகோதரர்களை மரத்தில் கட்டிவைத்து, நிர்வாணப்படுத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் அருகாமையில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் பசுமாட்டின் தோலை உரித்ததாக தலித் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏழுபேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள்மீது தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top