16 ஆண்டு உண்ணாவிரதத்தை முடிப்பதால் இரோம் சர்மிளா இன்று விடுதலை ஆகிறார்

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கக்கோரி கடந்த 16 ஆண்டுளாக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் இரோம் சானு சர்மிளா (வயது 44).

இரும்புப் பெண் என வர்ணிக்கப்படும் இவர் 2000–ம் ஆண்டு முதல் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்திவருவதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர் வாழ வலுக்கட்டாயமாக குழாய் மூலம் மூக்கு வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அறையே சிறைச்சாலை போல் ஆகிவிட்டது.

இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு, தான் உண்ணாவிரதத்தை கைவிட்டு அரசியலில் குதித்து ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கக்கோரி போராடப்போவதாகவும், மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் சர்மிளா அறிவித்தார்.

இதுபற்றி சர்மிளாவின் சகோதரர் இரோம் சிங்காஜித் கூறுகையில், ‘‘சர்மிளா நாளை (இன்று) மணிப்பூர் நகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது அவர் முறைப்படி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறார். அதைத்தொடர்ந்து அவரை கோர்ட்டு விடுதலை செய்யும். அவர் எங்கு செல்வார் என்பது எங்களுக்குத் தெரியாது. சர்மிளாவை வரவேற்க எங்கள் குடும்பத்தினர் தயாராக இருக்கிறோம். எனினும் இதில் அவருடைய விருப்பம்தான் முக்கியம்’’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top