24 பாரம்பரிய நினைவுச் சின்னங்களை காணவில்லை: மக்களவையில் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் தகவல்

மக்களவையில் கடந்த வாரம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா பதில் அளிக்கையில் இந்தியாவில் 24 பாரம்பரிய நினைவுச் சின்னங்களை காணவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
காணாமல் போன 24 நினைவுச் சின்னங்களில், மகாராஷ்டிராவில் காணப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கல் திட்டை அமைப்புகள், உத்தரப் பிரதேசத்தில் மலை பாறைகளில் செதுக்கப்பட்டிருந்த எழுத்துக்கள், ஓவியங்கள், கல் திட்டைகள், புத்த மற்றும் இந்து கோயில்கள், அசாம் மாநிலத்தில் இருந்த 16-ம் நூற்றாண்டை சேர்ந்த ஆப்கன் மன்னர் ஷெர் ஷாவின் துப்பாக்கிகள், ஹரியாணாவில் இருந்த இடைக்கால ஸ்தூபிகள், உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்த கோயில், நடுகற்கள், கல்லறைகள் மற்றும் சிதிலமடைந்த பகுதிகளை காணவில்லை.
காணாமல் போன இந்த நினைவுச் சின்னங்களை கண்டுபிடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழைய ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்தல், வருவாய் துறை வரைபடங்கள், பத்திரிகைகளில் வெளியான செய்திகள், நேரில் சென்று ஆய்வு நடத்துதல், பல்வேறு குழுக்களை அனுப்பி ஆய்வு செய்தல் போன்ற பல நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் பிறகே 24 நினைவுச் சின்னங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல நினைவுச் சின்னங்களை சரியாக பராமரிக்கவில்லை. பல நினைவுச் சின்னங்கள் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன. பல நினைவுச் சின்னங்களின் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. நகர விரிவாக்கத்துக்காக அல்லது கட்டுமானப் பணிகளுக்காக அந்த நினைவுச் சின்னங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
நினைவுச் சின்னங்களை பாதுகாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் (இஸ்ரோ) இந்திய தொல்லியல் துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம் தடை செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் எந்த கட்டுமானப் பணி கள் நடைபெற்றாலும் ஆக்கிரமிப்புகள் நடந்தாலும், செயற்கைக் கோள்கள் உதவியுடன் கண்டுபிடித்து இஸ்ரோ தகவல் தெரிவிக்கும். இது போல் 3,686 நினைவுச் சின்னங்களை இஸ்ரோ கண்காணித்து வருகிறது.
அத்துடன் புதிதாக 17 பகுதிகளை தொல்லியல் துறை பாதுகாப்பில் மத்திய அரசு விட்டுள்ளது. அவற்றில் அரசியல் சட்ட மேதை அம்பேத்கர், சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மால்வியா, ஜப்பான் போரின் போது சீனாவில் பல உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் துவாரகாநாத் கோட்னிஸ் ஆகியோரின் பிறந்த இடங்களும் அடங்கும். இவ்வாறு இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top