டெல்லி எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு மசோதாவை திருப்பி அனுப்பியது மத்திய அரசு

டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தற்போது அடிப்படை மாத ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வகை செய்யும் திருத்த மசோதாவை, கேஜ்ரிவால் அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றி, உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

928

அந்த மசோதாவில் தற்போது மாதம்தோறும் எம்எல்ஏக்களின் செலவுக்கு வழங்கப்படும் ரூ.88 ஆயிரத்தை ரூ.2.10 லட்சமாகவும், ஆண்டு பயணப்படியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும் உயர்த்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தவிர அடிப்படை மாத ஊதியமாக ரூ.50 ஆயிரம், தொகுதி நல நிதி ரூ.50 ஆயிரம், படி தொகை ரூ.30 ஆயிரம், தொலைபேசி உள்ளிட்ட தொலைதொடர்பு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம், தலைமை செயலக செலவு தொகை ரூ.70 ஆயிரமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் அமைச்சர்களின் மாத ஊதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாகவும், அவர்களது தொகுதி நல நிதி செலவு தொகை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது.

இந்த மசோதாவை ஆராய்ந்த மத்திய அரசு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 400 சதவீதம் வரை திடீரென ஊதியம் உயர்த்த என்ன காரணம்? பிற மாநிலங்களை விட, சிறிய தொகுதிகள் கொண்ட டெல்லி எம்எல்ஏக்களுக்கு இந்த அளவுக்கு ஊதிய உயர்வு வழங்குவது அவசியமா? என கேள்வி எழுப்பி மசோதாவை மீண்டும் கேஜ்ரிவால் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

முன்னதாக இதுகுறித்து கேஜ்ரிவால் அரசிடம், உள்துறை அமைச்சகம் சார்பில் 3 கேள்விகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவை வருமாறு:

முதலாவதாக இதுவரை எந்தவொரு மாநில எம்எல்ஏக் களுக்கும் ஒரே முறையில் 400 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்க டெல்லி எம்எல்ஏக்களின் ஊதியத்தை மட்டும் இந்த அளவுக்கு உயர்த்த என்ன காரணம்?

இரண்டாவதாக டெல்லியை விட மிக பெரிய தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கே இந்த அளவுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. தவிர, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களை ஒப்பிடுகையில் டெல்லியில் வாழ்வதாரத்துக்கான செலவு தொகை ஒரே மாதிரியாக உள்ளது.

எனவே கேஜ்ரிவால் அரசு இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top