பாலாற்றில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு: மாட்டுவண்டிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பம் மற்றும் ஆலாங்குப்பம் கிராமங்களுக்கு இடைபட்ட பாலாற்று பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளுவதற்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

இதற்கு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாலாற்றில் மணல் அள்ளினால், நீர் ஆதாரம் பாதிக்கப்படும். விவசாயம் பொய்த்து போகும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனக்கூறிய விவசாயிகள் மணல் அள்ளுவதற்கு வழங்கிய உத்தரவுக்கு தடை கோரினர்.

ஆனால், பிறப்பித்த ஆணையை திரும்ப பெற முடியாது என பொதுப் பணித்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த செயல் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர வைத்தது. ஏற்கனவே பாலாற்றில் ஆந்திர அரசு புதிதாக தடுப்பணைகளை கட்டியும், உயரத்தை அதிகரித்தும் வருகிறது.

இதனால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலாற்றில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கி இருப்பது மென்மேலும் பாதிப்படைய செய்வதாக விவசாயிகள் குமுறுகின்றனர். வீராங்குப்பம் பாலாற்றில் அனுமதி வழங்கிய நாளில் இருந்து இன்றுவரை தினமும் 200-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இதனால் பாலாற்றை நம்பி பாசனம் பெற்று வந்த விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் ஆத்திரமடைந்து, பாலாற்றுக்கு இன்று காலை சென்றனர். அப்போது மணல் அள்ளிக் கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் உமராபாத் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையேற்று, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top