சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது

தமிழகத்தின் தனித்துவ அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை லாபத்தில் இயங்கி வந்த சேலம் உருக்காலை தற்போது ரூ.450 கோடி வரை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சேலம் உருக்காலையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த, மத்திய விற்பனை மையம் கொல்கத்தாவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதனால் உருக்காலையின் வாடிக்கையாளராக இருந்த 70 நிறுவனங்கள் படிப்படியாக குறைந்து, தற்போது 9 நிறுவனங்கள் மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளன.

இவ்வாறு செயற்கையான நஷ்டத்தை காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக சேலம் உருக்காலையை அப்படியே தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.

ஒரு பொதுத்துறை நிறுவனம் நஷ்டத்தில் செயல்படுகிறது எனக் கருதினால், உரிய அதிகாரிகளை நியமித்து அதை லாபத்தில் இயங்க வைப்பதற்குப் பதிலாக அப்படியே தனியாருக்கு தாரைவார்த்தால் அந்த உருக்காலையை இத்தனை ஆண்டு காலம் நம்பி வாழ்க்கையை நடத்தி வரும் தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து சிந்திக்காமல் மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது.

எனவே சேலம் உருக்காலையை தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சியை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இதில், சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்த தமிழக அரசு தலையிட்டு போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை தொடக்கத்திலேயே மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top