பளுதூக்குதல் வீரரின் மலைக்க வைக்கும் உணவு வேட்டை

PANAM2015-CANADA-WEIGHTLIFTING-MEN-GR629QRNE.1

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான பிரேசில் பளுதூக்குதல் அணியில் பெர்னாண்டோ சரைவா ரீஸ் என்ற வீரரும் இடம் பெற்று இருக்கிறார். இவர் பளுதூக்குதலில் 105 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான உடல் எடைப்பிரிவில் பங்கேற்கிறார்.

கடந்த திங்கட்கிழமை ஒலிம்பிக் கிராமத்தில் அடியெடுத்து வைத்த இவருக்கு இப்போது அதிக வேலையே கிச்சனில் தான். தினமும் 7 முறை சாப்பிடுகிறார். காலையில் 10 முட்டைகளுடன் அவரது உணவு வேட்டை ஆரம்பிக்கிறது. அதன் பிறகு சாண்ட்விச், பழங்கள், உருளை கிழங்கு, பாஸ்தா மற்றும் புரோட்டீன் உணவு வகைகள் என்று விதவிதமாக வெளுத்து கட்டுகிறார். அரிசி சாதம், இறைச்சி, பீன்ஸ் மசாலா ஆகியவற்றையும் விட்டு வைப்பதில்லை. இறைச்சி என்றால் கொள்ளை பிரியம். “உணவு எனக்கு பெட்ரோல் மாதிரி. காலியாக காலியாக உள்ளே நிரப்பி கொண்டே இருக்க வேண்டும். நான் ஒன்றும் ஜாலிக்காக இப்படி உட்கொள்ளவில்லை. எனது உடல் எடையை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவே இப்படி நிறைய சாப்பிட வேண்டியிருக்கிறது” என்கிறார், சரைவா ரீஸ்.

“2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற போது, எனது ஒலிம்பிக் கனவு நனவானது. இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது ஒரே இலக்கு. எனது எண்ணம் இங்கு ஈடேறாவிட்டால், அடுத்த ஒலிம்பிக்கில் முயற்சிப்பேன். அடுத்த ஒலிம்பிக்கிலும் முடியாவிட்டால் அதற்கு அடுத்த தடவை முயற்சிப்பேன். பதக்கம் வெல்லும் வரை ஓயமாட்டேன்” என்று சூளுரைக்கும் 26 வயதான சரைவா ரீஸ்சின் தற்போதைய எடை 146 கிலோ ஆகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top