விவசாயி தற்கொலைக்கு ஆந்திர அரசே காரணம்: தாய் கண்ணீர் பேட்டி

201607301032339129_Farmer-suicides-due-to-the-state-of-Andhra-Pradesh-Mother_SECVPF

பாலாறு தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி சீனிவாசனின் தாயார் லட்சுமி கூறியதாவது:-

எங்களுக்கு 40 சென்ட் விவசாய நிலம் மட்டுமே உள்ளது. அந்த நிலத்தை நம்பியே இருக்கிறோம். மகன் சீனிவாசன் விவசாயத்தில் ஈடுபாடு கொண்டவர். கடுமையாக உழைப்பவர். விவசாயத்திற்காக கடன் பெற்றுள்ளார். குறைந்த அளவு கிடைத்த தண்ணீரை வைத்தே பாசன வசதி பெற முடிந்தது.

இந்த நிலையில், புல்லூர் பாலாற்றில் 5 அடியாக இருந்த தடுப்பணையை ஆந்திர அரசு 12 அடியாக உயர்த்தி தண்ணீர் விடாமல் செய்ததால் சீனிவாசன் மனமுடைந்தார். கடந்த ஒரு வாரமாக யாரிடமும் அவர் சரியாக பேசவில்லை. சாப்பிடுவதும் கிடையாது.

பாசன கால்வாய்களும் அடைக்கப்பட்டு விட்டது. தண்ணீரே கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டதால், கடனை எப்படி திருப்பி செலுத்த போகிறோம் என்ற கவலையில் மகன் சீனிவாசன் இருந்தார். உயர்த்தி கட்டப்பட்ட தடுப்பணை நேற்று நிரம்பியது. இதனை பார்ப்பதற்காக ஏக்கத்துடன் ஊர்காரர்கள் சென்றனர்.

சீனிவாசனும் காலையிலேயே சென்றார். மாலை வரை வீடு திரும்பவில்லை. மகன் எப்போது வருவார் என்று எதிர்ப்பார்த்து இருந்தோம். அந்த நேரத்தில் உறவினர்கள் ஓடிவந்து ‘‘உன் மகன் சீனிவாசன் தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்’’ எனக் கூறினர். இதனை கேட்டடு நான் அதிர்ச்சியடைந்தேன். பதறியடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு ஓடினேன்.

தடுப்பணையில் மகனின் உடலை தேடுவதை பார்த்து கதறி அழுதேன். எனக்கு இருந்தது ஒரு மகன் மட்டுமே. அவரும் தற்கொலை செய்து கொண்டார். இனி யார் எங்கள் குடும்பத்தை காப்பாற்றுவார்கள். என் மகன் சாவுக்கு ஆந்திர அரசே காரணம்.

இவ்வாறு அவர் கூறி கதறி அழுதார்.

சீனிவாசன் மகள் ஜெயபாரதி கூறுகையில்:-

என் அப்பா தான் குடும்பத்தையே காப்பாற்றி வந்தார். என்னுடன் சேர்த்து 3 மகள், ஒரு மகன் உள்ளோம். விவசாயத்தை நம்பியே இருந்தோம். பாலாற்றில் தடுப்பணை கட்டியதால் என் அப்பா தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்றார்.

பாலாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:-

பாலாற்றின் பல இடங்களில் ஆந்திரா தடுப்பணைகளை கட்டி உள்ளது. இதனால் வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தடுப்பணைகளை கட்டிய ஆந்திரா, தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கொடுப்பதற்கு பாசன கால்வாய்களை கூடுதலாக அமைத்திருக்க வேண்டும்.

ஆனால், ஏற்கனவே இருந்த பாசன கால்வாய்களை மூடிவிட்டது. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திர மக்களின் நலனின் மட்டுமே அக்கறை காட்டுகிறார். பக்கத்து மாநிலமான தமிழக மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை. விவசாயி சீனிவாசன் தற்கொலைக்கு பொறுப்பேற்று ஆந்திர அரசு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசும் சீனிவாசன் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க வேண்டும்.

தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பாசன கால்வாய்களை அமைத்து உடனடியாக தரவேண்டும். பாலாற்று பிரச்சினைக்கு தமிழக அரசு நிரந்தரமாக தீர்வு கண்டு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top