கோவை அருகே வாளையாரில் பரிதாபம் : ரயிலில் அடிபட்டு பெண் யானை பலி

elephant-killed-eps

கோவை மதுக்கரை வனசரகத்துக்கு உட்பட்ட வாளையார் பகுதியில், தண்டவாளத்தை கடந்தேபாது ரயிலில் அடிபட்டு பெண் யானை பரிதாபமாக இறந்தது. கேரளாவில் இருந்து சென்னைக்கு செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்று காலை கோவை ரயில்நிலையம் நோக்கி வந்தது. காலை 6 மணியளவில் வாளையார் பகுதியில் உள்ள புதுப்பதி அருகில் ரயில் வந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரு பெண் யானை மீது ரயில் மோதியது.

இதுதொடர்பான தகவலின்படி கோவை மாவட்ட வன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். உயிருக்கு போராடிய யானைக்கு கால்நடை மருத்துவர் மனோகரன் சிகிச்சை அளித்தார். இருப்பினும், காலை 8.30 மணியளவில் யானை இறந்தது. பிரேத பரிசோதனைக்குபின் யானையின் உடல் வனப்பகுதியில் குழிதோண்டி அடக்கம் செய்யப்பட்டது. டிரைவர் மீது வழக்குப்பதிவு:

இதுகுறித்து கோவை மாவட்ட வனத்துறை அலுவலர் பெரியசாமி கூறுகையில், “இறந்துபோன பெண் யானைக்கு 20 வயது இருக்கும். ரயில் மோதியதில் யானையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தது.

இப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாக ரயில் வந்துள்ளதால் யானை அடிபட்டு இறந்தது தெரியவந்துள்ளது. யானையின் இறப்புக்கு காரணமான ரயில் ஓட்டுநர் (பைலட்) மீது வனஉயிரின தடுப்பு சட்டம் 1972ன்கீழ் வழக்குபதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

40 நாளில் 10 யானை பலி

வாளையார் முதல் மதுக்கரை வரையிலான ரயில்பாதையில் ரயில்களை 25 கி.மீ. முதல் 35 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்றும், தண்டவாளத்தை கடக்கும் பாதைகளில் சைரன் ஒலியை எழுப்ப வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ரயில் டிரைவர்கள் கடைபிடிக்காததால் யானை இறப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் 20ம் தேதி மதுக்கரை மரப்பாலம் அருகே தர்மலிங்கேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை ரயிலில் அடிபட்டு பலியானது. தற்போது மேலும் ஒரு பெண் யானைபலியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் கடந்த 40 நாட்களில் 10 யானைகள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top