கர்நாடகாவில் பஸ்கள் 2-வது நாளாக ஓடவில்லை: வேலை நிறுத்தத்தால் ரூ.17 கோடி இழப்பு

201607261051578530_2nd-day-of-the-buses-did-not-run-in-Karnataka-Rs-17-crore_SECVPF

கர்நாடகா மாநிலத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் 35 சதவீதம் ஊதிய உயர்வு கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

இதனால் கர்நாடகாவில் உள்ள 4 போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 23 ஆயிரம் பஸ்கள் ஓடவில்லை. இதன் காரணமாக முதல் நாளான நேற்று கர்நாடகா அரசுக்கு ரூ.17 கோடி இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று 2-வது நாளாக அரசு பஸ்கள் ஓட வில்லை. 23 ஆயிரம் பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சுமார் 1½ லட்சம் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

35 சதவீதம் ஊதிய உயர்வு தரும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று கோ‌ஷமிட்டனர். சில பகுதிகளில் வாகனங்கள் மீது போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். நேற்று போக்குவரத்து கழக ஊழியர்களின் தாக்குதலில் 150 பஸ்கள் சேதமடைந்தன.

போக்குவரத்து கழக ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமைய்யா ஏற்க மறுத்து விட்டார். 35 சதவீத ஊதிய உயர்வு நிச்சயமாக கொடுக்க இயலாது என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு அதிகரித்து கொடுத்தாலே அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1550 கோடி கூடுதல் செலவாகும். எனவே 35 சதவீதம் உயர்வு அளித்தால் பணத்துக்கு எங்கே போவது?” என்று கூறினார்.

போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா அரசு எச்சரித்துள்ளது. அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு ஜெயில் அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

இதற்கிடையே கர்நாடகா பஸ்கள் நிறுத்தப்பட்டதால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து அண்டை மாநிலங்கள் கூடுதல் பஸ்களை இயக்கி வருகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top