வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

201607260917181779_West-Indies-against-first-Test-match-indian-team-record_SECVPF

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

சாதனை துளிகள்…

* டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் கண்ட மோசமான தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு 2005-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 86 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டு இருந்தது. அந்த அணி சொந்த மண்ணில் சந்தித்த 5-வது இன்னிங்ஸ் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய அணி பெற்ற 6-வது டெஸ்ட் வெற்றி இது.

* ஆசியாவுக்கு வெளியே இந்திய அணி விளையாடிய கடைசி 24 டெஸ்ட் போட்டியில் (2011 முதல்) பெற்ற 2-வது வெற்றி இது. கடைசியாக 2014-ம் ஆண்டில் லார்ட்சில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி கண்டு இருந்தது.

* இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார். வெஸ்ட் இண்டீசில் இந்திய அணி வீரர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சு இதுவாக அமைந்துள்ளது. 1953-ம் ஆண்டில் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர் சுபாஷ் குப்தே 162 ரன்கள் வழங்கி 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இந்திய வீரரின் சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

ஆசியாவுக்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 7 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 5-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார். முன்னதாக சுபாஷ் குப்தே (7 விக்கெட், வெஸ்ட் இண்டீசில்), பிரசன்னா (8 விக்கெட், நியூசிலாந்தில்), கும்பிளே (8 விக்கெட், ஆஸ்திரேலியாவில்), ஹர்பஜன்சிங் (7 விக்கெட், தென் ஆப்பிரிக்காவில்) ஆகியோர் ஏற்கனவே இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

* 33-வது டெஸ்டில் ஆடிய அஸ்வின் 17-வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தி அதிக முறை 5 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் வீழ்த்திய இந்திய வீரர்கள் வரிசையில் சந்திரசேகரை பின்னுக்கு தள்ளி விட்டு 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த வரிசையில் கும்பிளே (35 முறை, 132 டெஸ்ட்), ஹர்பஜன்சிங் (25 முறை, 103 டெஸ்ட்), கபில்தேவ் (23 தடவை, 131 டெஸ்ட்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். மேலும் ஒரே டெஸ்டில் சதம் மற்றும் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டை இந்திய வீரர் ஒருவர் வீழ்த்துவது இது 4-வது முறையாகும்.

அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தியது 2-வது முறையாகும். ஏற்கனவே அவர் 2011-ம் ஆண்டில் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்சில் 103 ரன் எடுத்ததுடன், 5 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார். ஏற்கனவே இந்திய வீரர்கள் வினோ மன்கட் (1952-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக), பாலி உம்ரிகர் (1962-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) இதே சாதனையை ஒரு முறை நிகழ்த்தியவர்கள் ஆவார்கள்.

* டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை பெற்றது இது 5-வது முறையாகும். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் 3-வது முறையாக ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். ஆசியாவுக்கு வெளியே ஆட்டநாயகன் விருதை பெற்ற 3-வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். ஏற்கனவே ரவிசாஸ்திரி, கும்பிளே ஆகியோர் ஆசியாவுக்கு வெளியே இந்த விருதை பெற்றுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top