இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவின் ஒலிம்பிக் கனவு முடிந்தது: விஜய் கோயல் சூசக தகவல்

201607260730495611_Indian-wrestler-narsingh-Yadav-Olympic-dream-ended-Vijay_SECVPF

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக மல்யுத்த போட்டியில் பிரீஸ்டைல் 74 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் நார்சிங் யாதவ் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் அடுத்த மாதம் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள ஒரு இடத்தை பெற்றுக்கொடுத்தார்.

ஆனால் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத வரும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறவில்லை. இதனால் அவர் தனக்கும், நார்சிங்குக்கும் இடையே தகுதி போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் கோர்ட்டுக்கு சென்ற சுஷில்குமாருக்கு அங்கும் சாதகமான முடிவு கிடைக்கவில்லை.

ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த நார்சிங் யாதவிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் ‘மெதன்டினோன்’ என்னும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது நேற்று முன்தினம் தெரியவந்தது. இதேபோல் அவரது அறையில் தங்கி வந்த மற்றொரு மல்யுத்த வீரரும், அவருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுபவருமான சந்தீப் துல்சி யாதவும் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. சந்தீப் துல்சி யாதவ் 2013-ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றவர் ஆவார்.

நார்சிங் யாதவ் மீதான ஊக்க மருந்து புகார் குறித்து இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் நார்சிங் யாதவ் கடந்த 19-ந் தேதி எழுத்துபூர்வமாக அளித்த புகாரில் சாய் அதிகாரி ஒருவர் மற்றும் வீரர்கள் உள்பட சிலர் தனக்கு எதிராக சதி செய்வதாக குறிப்பிட்டு இருந்தார். கடந்த ஒரு மாதத்தில் நார்சிங் யாதவுக்கு 3 முறை ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டதும் சந்தேகம் அளிக்கிறது. நார்சிங் யாதவின் புகார் குறித்து நான் விளையாட்டு அமைச்சகம் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கிறேன். நார்சிங் யாதவ் அப்பாவி. அவர் எந்தவித தவறும் செய்து இருக்க வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் நார்சிங் யாதவ் அளித்த ஒரு பேட்டியில், ‘ரியோ ஒலிம்பிக் போட்டியில் என்னை பங்கேற்க விடாமல் செய்ய சதி நடக்கிறது. சாயால் (இந்திய விளையாட்டு ஆணையம்) எனக்கு வழங்கப்பட்ட உணவில் ஏதோ கலக்கப்பட்டு இருக்கிறது. எனது தேர்வு குறித்து கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

நார்சிங் யாதவின் ஊக்க மருந்து சர்ச்சை குறித்து மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயலிடம் கருத்து கேட்ட போது, ‘தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாகும். அது உலக ஊக்க மருந்து கழகத்தின் விதிமுறையின் கீழ் இயங்கி வருகிறது. நார்சிங்கின் இரண்டு மாதிரி சோதனையும் தோல்வி அடைந்துள்ளதால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் 119 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்ளும். தேசிய ஊக்க மருந்து கழக விசாரணையில் நார்சிங் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்க போதிய வாய்ப்பு அளிக்கப்படும். இந்த விவகாரத்தில் ஊக்க மருந்து தடுப்பு கழகம் தான் முடிவு செய்ய முடியும். நாங்கள் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது’ என்று பதிலளித்தார்.

ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு 120 பேர் கொண்ட இந்திய அணி அனுப்பப்படும் என்று தெரிவித்து இருந்த நிலையில் இந்திய அணியில் 119 பேர் இடம் பெறுவார்கள் என்று மத்திய மந்திரி விஜய் கோயல் கூறியிருப்பதால் நார்சிங் யாதவின் ஒலிம்பிக் கனவு முடிந்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சுஷில்குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ‘மல்யுத்தம் சந்திக்கும் கஷ்டங்கள் எதிர்பாராத ஒன்றாகும். மல்யுத்தத்திற்கு நான் எனது வாழ்க்கையையே கொடுத்து இருக்கிறேன். இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் 3-வது பதக்கம் வெல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் கடந்த ஒரு மாதகாலமாக ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதில் இருந்து விலகி இருக்கிறேன். நமது நாட்டுக்காக பதக்கம் வெல்வார்கள் என்று சக மல்யுத்த வீரர்களுக்கு எப்பொழுதும் நான் ஆதரவு அளித்து வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top