ஹிலாரிக்கு ஆதரவளித்ததாக புகார்: ஜனநாயகக் கட்சித் தலைவர் ராஜிநாமா

ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரையடுத்து, அந்தக் கட்சியின் தலைவர் டெபி வாஸர்மன் ஷூல்ஸ் ராஜிநாமா செய்தார்.

வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பிலான வேட்பாளரை அறிவிப்பதற்கான 4 நாள் கட்சி மாநாடு திங்கள்கிழமை தொடங்குகிறது.

இந்த நிலையில், கட்சித் தலைவர் டெபி ஷூல்ஸ் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

அதிபர் பதவி வேட்பாளர் போட்டியின்போது, கட்சித் தலைவர் என்ற முறையில் நடுநிலையாக இல்லாமல் ஹிலாரிக்கு சாதமாக ஷூல்ஸ் நடந்து கொண்டது “விக்கிலீக்ஸ்’ வலைதளம் அண்மையில் வெளியிட்ட மின்னஞ்சல்கள் மூலம் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் எழுந்த எதிர்ப்பையடுத்து அவர் தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.

 டிரம்ப்புக்கே ஆதரவு: ஒபாமாவின் சகோதரர்

அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்புக்கே வாக்களிக்கப் போவதாக அதிபர் ஒபாமாவின் சகோதரர் மாலிக் ஒபாமா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

டொனால்டு டிரம்ப் தனது இதயத்திலிருந்து பேசுகிறார். “அமெரிக்காவை மீண்டும் மேன்மையுறச் செய்வேன்’ என்ற டிரம்ப்பின் கோஷம் மிகவும் அருமையானது. ஒபாமா ஏமாற்றம் அளிக்கிறார்.

அவரும், ஹிலாரி கிளிண்டனும் சேர்ந்து லிபியா முன்னாள் அதிபரும், எனது நண்பருமான கடாஃபியைக் கொன்று விட்டனர். நான் கென்யாவில் மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிட்டபோது எனக்காக ஒபாமா எதுவுமே செய்யவில்லை என்றார் மாலிக்.

கென்யாவில் கணக்குப் பதிவாளராகப் பணியாற்றி வரும் மாலிக்குக்கு, அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் வாக்குரிமை உள்ளது. ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியில் இணைந்திருந்த அவர், அண்மையில்தான் அந்தக் கட்சியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top