சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை வண்ணாரப்பேட்டை–திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

hennai-Washermanpet--Jayalalithaa-inaugurated-the-mission_SECVPF

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. ரூ.3,770 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டப்பணிகளின் தொடக்க விழா நேற்று காலை 11 மணிக்கு தண்டையார்பேட்டை துறைமுக பொறுப்பு கழக பாபு ஜெகஜீவன்ராம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலை 10.55 மணிக்கு வந்தார். அவரை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால், துறையின் முதன்மை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

விழா மேடைக்கு வந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை, மத்திய மந்திரி வெங்கையாநாயுடு வரவேற்றார்.

முதல் நிகழ்ச்சியாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள். அதனை தொடர்ந்து மத்திய மந்திரி வெங்கையா நாயுடு விழா மலரை வெளியிட்டார். அதை அமைச்சர் எம்.சி.சம்பத் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கத்திற்கான பணிகளை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். அப்போது மேடை மற்றும் பொது மக்கள் அமர்ந்திருந்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த எல்.சி.டி. திரையில் ராட்சத எந்திரம் மூலம் பணிகள் தொடங்கும் காட்சிகள் ஒளிபரப்பானது.

மெட்ரோ பணிகளை தொடங்கி வைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு 2003–ம் ஆண்டு அப்போதைய எனது தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் தான் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித்தடம் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித் தடம் என இரு வழித் தடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு எனது தலைமையிலான அப்போதைய அரசு வித்திட்டது.

14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு 2007–ம் ஆண்டு, நவம்பர் மாதம் மாநில அரசும், 2009–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்திற்காக, 2006–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு மே மாதம் வரை அப்போதைய தி.மு.க. ஆட்சியில் 1,143 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது. 2011–ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை 11,596 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒவ்வொரு ஆண்டும் முழுமையாக ஒதுக்கி, திட்டப்பணிகள், குறித்த காலத்தில் முடிவுறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இத்திட்டத்திற்காக இதுவரை தமிழக அரசு 2,383 கோடி ரூபாயை பங்கு மூலதனமாகவும், 1,854 கோடி ரூபாயைச் சார்நிலைக் கடனாகவும், 82.51 கோடி ரூபாயை மானியமாகவும் வழங்கியுள்ளது. மத்திய அரசு 1,950 கோடி ரூபாயைப் பங்கு மூலதனமாகவும், 365 கோடி ரூபாயைச் சார்நிலைக் கடனாகவும் வழங்கியுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் மூலம் 7,095 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.

2011–ம் ஆண்டு வரையிலான அப்போதைய தி.மு.க. ஆட்சியில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப்பணிகளில் 3 சதவீதமே முடிவடைந்திருந்தது. எனது தலைமையிலான அரசு 2011–ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற பின்னர் பணிகளை விரைந்து செயல்படுத்தியதன் காரணமாக உயர்த்தப்பட்ட வழித்தடங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களை பொறுத்தவரை 98 சதவீதப்பணிகளும், நிலத்தடி வழித் தடங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களை பொறுத்த வரையில் 65 சதவீதப் பணிகளும், பணிமனையை பொறுத்தவரையில் 100 சதவீதப் பணிகளும் தற்போது முடிவுற்றுள்ளன.

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் சேவை 29.6.2015 முதல் வழங்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட வழித்தடப் பகுதியான சின்னமலை முதல் விமான நிலையம் வரை அடுத்த மாதத்திலும், ஆலந்தூர் முதல் புனித தோமையர் மலை வரை வரும் அக்டோபர் மாதத்திலும், நிலத்தடி வழித்தடத்தில் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், பயணிகள் சேவை, துவக்கப்பட்டு விடும். மீதமுள்ள பகுதிகளில் அனைத்துப் பணிகளும் 2017–ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும்.

வடசென்னைப்பகுதியில் பெருகி வரும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, அப்பகுதி மக்களும் மெட்ரோ ரெயில் சேவையை பெற்றிடும் வகையில், மெட்ரோ ரெயில் திட்டத்தின் வழித்தடத்தை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர்–விம்கோ நகர் வரையிலான 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிப்பதற்கான கருத்துரு 2010–ம் ஆண்டு, மத்திய அரசுக்கு அப்போதைய தி.மு.க. அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, இதற்கான ஒப்புதலை வழங்கவே இல்லை. நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, எனது அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவும், வெங்கையா நாயுடு ஒத்துழைப்பின் காரணமாகவும், தற்போது மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்த வழித்தடத்தில், 8 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படும். இதில், சர் தியாகராயர் கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, மற்றும் டோல்கேட் மெட்ரோ நிலையங்கள் எனது சட்டமன்றத் தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் அமைக்கப்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 45.1 கிலோ மீட்டர் நீளத்திற்கான, மெட்ரோ வழித்தடங்கள் எதிர்காலத் தேவைக்கு போதாது என்பதால் எனது தலைமையிலான அரசு, சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்தில் மூன்று வழித்தடங்களைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. இவ்வழித்தடங்களில், இரண்டு வழித்தடங்கள் வடசென்னை பகுதியான மாதவரத்திலிருந்து, செயல்படுத்தும் வகையில் தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இத்திட்டங்களுக்கு நிதியுதவி பெறுவதற்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் 2016–ம் ஆண்டுக்கான சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பப்படும். மத்திய அரசு அதற்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும் என இத்தருணத்தில் வெங்கையா நாயுடுவை கேட்டுக்கொள்கிறேன்.

2011–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய தி.மு.க. ஆட்சியின் போது மத்திய அரசு, மாநில அரசு மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல ஷரத்துகள் மாநில அரசின் நலன்களுக்கு எதிராக இருப்பதால் இவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என நான் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன். 14.6.2016 அன்று பிரதமர் நான் அளித்த கோரிக்கை மனுவில் இது பற்றி விரிவாகத் தெரிவித்துள்ளேன். மாநில அரசு பாதிக்காத வகையில் இந்த ஒப்பந்தத்தை மாற்றி அமைப்பதற்குத்தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இன்று(நேற்று) அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்–விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட்டு அதன் மூலம் வடசென்னை மக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மெட்ரோ ரெயில் திட்டங்கள் தொடர்பான குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. அதில் கோயம்பேடு–ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் சேவையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைப்பது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்று இருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top