மானாவாரி நில விவசாயத்திற்கு புதிய திட்டம்; கூட்டுறவுக்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.1,680.73 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் அறிவிப்பு

மானாவாரி நில விவசாயத்திற்கு புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும், கூட்டுறவுக்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.1,680.73 கோடி ஒதுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

New-project-for-rainfed-agriculture-land-Rs-168073-crore_SECVPF

பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:-

2016-2017-ம் ஆண்டில், 27.50 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் திருந்திய நெல் சாகுபடி முறையும் 43,688 ஏக்கர் நிலப்பரப்பில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையும் விரிவாக்கம் செய்யப்படும். பருத்தி மற்றும் காய்கறி சாகுபடியில் துல்லியப்பண்ணைய முறை ஊக்குவிக்கப்படும். மானாவாரி நில விவசாயத்திற்கு ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

பாசன வசதிகளைக் கொண்ட நிலங்களில், பச்சைப்பயறு, உளுந்து, துவரை போன்ற பயறுவகை சாகுபடியினை ஊக்குவித்து, பயறு உற்பத்தியில் தன்னிறைவுக்கான ஒரு சிறப்புத் திட்டம் இந்த ஆண்டில் துவங்கப்படும். பயறு உற்பத்தியில் 9.80 லட்சம் மெட்ரிக் டன் அளவை அடையும் நோக்கத்துடன், 27.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயறு சாகுபடி மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

2016-2017-ம் ஆண்டில், வேளாண் பயிர்கள் பயிரிடப்படவுள்ள 28,540 ஏக்கர் பரப்பிலும், தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்படவுள்ள 86,707 ஏக்கர் பரப்பிலும் நுண்ணீர்ப்பாசன முறை 319 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

இதுவரை, 20.99 கோடி ரூபாய் செலவில் வேளாண் எந்திரங்களை வாடகைக்கு வழங்கும் 212 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2016-2017-ம் ஆண்டில், மேலும் 32.45 கோடி ரூபாய் செலவில் 324 மையங்கள் அமைக்கப்படும். 2016-2017-ம் ஆண்டிற்கு, பண்ணை எந்திரமயமாக்கல் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பசுமைக்குடில் சாகுபடி, நிழல்வலை சாகுபடி, அடர் நடவு முறை, துல்லியப்பண்ணைய முறை போன்ற நவீன தொழில்நுட்பங்கள் தோட்டக்கலைப் பயிர்களில் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான சாகுபடி பரப்பு, தற்போதுள்ள 13.85 லட்சம் ஏக்கரிலிருந்து, 16 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்படும். தோட்டக்கலைத் துறைக்கென, 2016-2017-ம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 518.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்களை வழங்குவதற்காக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு சுழல் நிதியாக 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்கள், காய்கறிகள் போன்ற விரைவில் அழுகக்கூடிய விளைபொருட்களை, உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் வரையிலான வினியோகச் சங்கிலித் தொடர் மேலாண்மைக்காக ஒரு சிறப்புத்திட்டத்தை, 10 மாவட்டங்களில் 398.75 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இயற்கைச் சீற்றங்களால் விவசாயத்தில் ஏற்படும் இழப்புகளிலிருந்தும், அதனால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மையிலிருந்தும் விவசாயிகளைப் பாதுகாக்க, ‘பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்’ என்ற புதிய மேம்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். 2016-2017-ம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்கு 239.51 கோடி ரூபாய் மாநில அரசின் பங்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தள்ளுபடி

தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற, ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முதல்-அமைச்சர், சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு 31.03.2016 அன்று வரை செலுத்த வேண்டிய குறுகியகாலப் பயிர்க் கடன்கள், நடுத்தரகால மற்றும் நீண்டகால விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்துள்ளார். இதன்படி தள்ளுபடி செய்ய வேண்டிய கடன் மற்றும் வட்டி உள்ளிட்ட மொத்தத்தொகை 5,780.92 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தொகை திரும்பச்செலுத்தப்படும் வரையுள்ள வட்டியுடன் கூட்டுறவு வங்கிகளுக்கு ஐந்து ஆண்டுகளில் அரசால் திரும்பச் செலுத்தப்படும். இந்தத் தள்ளுபடியால் 8,35,360 குறு மற்றும் 8,58,785 சிறு விவசாயிகள் பயன் பெறுவார்கள். இந்த கூட்டுறவுக் கடன் தள்ளுபடித் திட்டத்திற்காக, 2016-2017-ம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,680.73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2016-2017-ம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 6,000 கோடி ரூபாய் புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top