தமிழக பட்ஜெட்: வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.140 கோடியில் திட்டம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

flood

வைகை மற்றும் நொய்யல் ஆறுகளின் நீர்வரத்தினை நிலைப்படுத்தவும், வனப்பகுதிகளில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காகவும், அந்த ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள காடுகளின் வளத்தைப் பெருக்கி பல்லுயிரின பாதுகாப்பை மேம்படுத்த 24.58 கோடி ரூபாய் செலவில் ‘வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிரளித்தல்’ என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்.

வன விலங்குகளின் தாக்குலால் ஏற்படும் உயிரிழப்பு, பயிர் சேதம், உடைமைகளுக்கு ஏற்படும் சேதம் போன்வற்றிற்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை, மாநிலப் பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளுக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.

நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவோரின் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும் குடிமராமத்து முறைக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், நீர் நிலைகளை மீட்டெடுப்பதற்காகவும், இந்த அரசு நீர் ஆதார மேலாண்மைக்கு ஒரு மாநிலம் தழுவிய இயக்கத்தை மேற்கொள்ளும்.

குடிமராமத்து முறைக்கு புத்துயிரூட்டுவதற்காக, முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் ஊக்க நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில் நபார்டு வங்கி உதவியுடன் இந்த நிதி கணிசமான அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.

அண்மையில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ள, வடிகால்களை அகலப்படுத்துதல், வாய்க்கால்களின் வரப்புகளையும், நதிக் கரைகளையும் பலப்படுத்துதல் போன்ற வெள்ளத்தடுப்பு பணிகளை ரூ. 140 கோடி செலவில் நபார்டு வங்கி நிதி உதவியுடன், 2016-2017 ஆம் ஆண்டில் இந்த அரசு மேற்கொள்ளும்.

எளிதாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய சென்னை போன்ற கடலோர மாவட்டங்களுக்காக, விரிவான வெள்ளப் பாதுகாப்பு திட்டம் ஒன்றை இந்த அரசு தயாரித்து வருகிறது.

இத்திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் நபார்டு வங்கி உதவியுடன் வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ. 445.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top