இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் ஆன்டிகுவாவில் இன்று தொடக்கம்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ஆன்டிகுவாவில் இன்று தொடங்குகிறது.

4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் இரு பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாடியது. அவ்விரு ஆட்டங்களும் ‘டிரா’வில் முடிந்தன.

இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. புதிய பயிற்சியாளர் அனில் கும்பிளேவின் வழிகாட்டுதலில் இந்தியா அடியெடுத்து வைக்கும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

சில ஆண்டுகளாக வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி சொதப்பினாலும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மட்டும் சிறப்பாக விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக ஆடிய 5 டெஸ்ட் தொடர்களையும் (3 இந்திய மண்ணில், 2 வெஸ்ட் இண்டீஸ் மண்ணில்) இந்திய அணியே கைப்பற்றி இருக்கிறது. இதனால் நமது வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

மீண்டும் ஐந்து பவுலர் யுக்தியை கடைபிடிக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதால் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்காது. அத்துடன் ஆடுகளம் சுழலுக்கு உகந்த வகையில் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருப்பதால் 2 சுழற்பந்து வீச்சாளருடன் ஆடுவதா? அல்லது மூன்று சுழற்பந்து வீச்சாளரை சேர்ப்பதா? என்பது குறித்து அணி நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இங்குள்ள ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். தொடக்க வீரர்கள் முரளிவிஜயும், ஷிகர் தவானும் நிலைத்து நின்று நல்ல தொடக்கம் உருவாக்கி தந்தால், பெரிய ஸ்கோரை எட்டி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க உதவிகரமாக இருக்கும். பவுலிங்கை பொறுத்தவரை அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்து வீச்சைத் தான் இந்திய அணி அதிகம் எதிர்பார்க்கிறது.

அதே சமயம் உள்ளூரில் விளையாடுவதால் வெஸ்ட் இண்டீஸ் அணி கடும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. போதிய அனுபவம் இல்லாவிட்டாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். 2002-ம் ஆண்டு அக்டோபருக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்டில் வீழ்த்தாத ஒரே அணி இந்தியா தான். இந்த காலக்கட்டத்தில் (கடந்த 14 ஆண்டில்) வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு எதிராக 15 டெஸ்டில் விளையாடி அதில் 8-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது. இந்த சோகத்துக்கு விடைகொடுக்க வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பலமாக முயற்சிப்பார்கள்.

டெஸ்ட் தரவரிசையில் 112 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி தொடரை 3-0 அல்லது அதை விட சிறந்த நிலையில் வசப்படுத்தினால் மட்டுமே தரவரிசை புள்ளியை இழக்காமல் தக்கவைக்க முடியும். 65 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்றால், அந்த அணிக்கு அதிகமான தரவரிசை புள்ளிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2006-ம் ஆண்டில் ராகுல் டிராவிட் தலைமையிலும், 2011-ம் ஆண்டில் டோனி தலைமையிலும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது. இந்த வரிசையில் ‘ஹாட்ரிக்’ அடிப்பதே கோலி அணியின் கனவாகும். அது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: முரளிவிஜய், ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), புஜாரா அல்லது லோகேஷ் ராகுல், ரஹானே, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, அமித் மிஸ்ரா அல்லது ஸ்டூவர்ட் பின்னி அல்லது உமேஷ் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ்: டேரன் பிராவோ, கிரேக் பிராத்வெய்ட், சாமுவேல்ஸ், ஜெர்மைன் பிளாக்வுட் அல்லது லியோன் ஜான்சன், ஷேன் டவ்ரிச் (விக்கெட் கீப்பர்), கார்லஸ் பிராத்வெய்ட், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), தேவேந்திர பிஷூ, கேப்ரியல், மிக்யூல் கம்மின்ஸ், ராஜேந்திர சந்திரிகா.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை டென்2, டென்3, டென்1 எச்.டி. சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top