மக்களவையில் பெண் எம்.பி.க்கள் கொந்தளிப்பு; இந்தியாவில் பலாத்காரத்தால் பாதித்த பெண்களுக்கு நீதி கிடைக்குமா?

pu

பாலியல் பலாத்கார பாதிப்பு பெண்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்குமா, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா அல்லது நாம் வெட்கித் தலைகுனிய வேண்டியதுதானா என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் கடும் கேள்விகளை எழுப்பினார்.

கேள்வி நேரத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய ரஞ்ஜீத் ரஞ்சன் “ஹரியாணாவில் 3 ஆண்டுகளுக்கு முன்னால் பாலியல் பலாத்காரம் செய்த அதே பெண்ணை அதே நபர்கள் மீண்டும் பலாத்காரம் செய்துள்ளனர், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளித்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? உத்தரப்பிரதேசத்திலும் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் குழந்தையையும் பெற்றெடுத்து விட்டாள், மீண்டும் குற்றவாளி அவரை அச்சுறுத்துவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நாட்டில் பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை. நாம் எவ்வளவு சட்டங்களை கொண்டு வந்தாலும் இதுதான் உண்மை. இங்கு பேசுவதன் மூலம் நான் என்னையே திருப்தி செய்து கொள்கிறேன், என்னுடைய ஆதங்கத்தையும் வெறுப்பையும் இங்கு கொட்டுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஆறுதல் அளிக்க முயல்கிறேன்.

இவர்களுக்கு நம் நாட்டில் நீதி கிடைக்குமா, அல்லது நாம் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டுமா?” என்று கொந்தளித்தார்.

தேசியவாத காங்கிரஸ் உறுப்பிஅன்ர் சுப்ரியா சூலே கூறும்போது, “டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஒரே குரலில் சட்டங்கள் இயற்றப்பட்டன, ஆனால் சமூகத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. நாம் மேலும் என்ன செய்ய முடியும் என்பதை யோசிக்க வேண்டும், தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்” என்றார். தனது கொந்தளிப்பின் வேகத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று கூறி உடனேயே தனது கருத்தை ‘இது சரியானதல்ல’ என்று வாபஸ் பெற்றார்.

இதனையடுத்து உறுப்பினர்கள் பலரும் இவர்கள் கருத்துக்கு ஆதரவுக்குரல் எழுப்பினர். இது குறித்து விவாதம் மேலும் நடைபெற வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top