சிறீலங்கா தொடர்பான தீர்மானகளுக்கு முடிவு கட்டுகிற கோணத்தில் தான் மார்ச் மாதத்தில் வரப்போகின்ற அறிக்கை இருக்கும் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

aaa-e1423606963502

இலங்கை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் ஒரு நேர்காணல்.

மனித உரிமை ஆணையரின் வாய்மொழி அறிக்கையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த வாய்மொழி அறிக்கையை பொறுத்தவரை, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முன் மொழியப்பட்ட 30/1 என்ற தீர்மானம் வழியாக தான் பார்க்க வேண்டும். அதில் மனித உரிமை ஆணையர் தன் அறிக்கையில் முப்பது ஆண்டு காலத்தில் சிறிலங்கா நீதித்துறை முழுமையாக அதனுடைய நம்பகத்தன்மையை இழந்து இருக்கிறது. நடுநிலை வகிக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கும் இந்நிலையில், ஒரு உள்ளக விசாரணை நடத்த முடியாது என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். ஆனால், அதை தாண்டி ஒரு கலப்பு பொறிமுறையை வலியுறுத்தியிருந்தார். உண்மையில், அந்த கலப்பு பொறிமுறையை ஒரு தெளிவற்ற வகையில் தான் அவர் அந்த சிபாரிசை செய்து இருந்தார். அந்த கலப்புபொறிமுறையை நடைமுறைப்படுத்த வகையில், ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள்; குறிப்பாக அமேரிக்காவின் தலைமையில் கலப்புபொறிமுறை என்கிற விடையத்தை சிறீலங்கா அரசிற்கு முழுமையான அதிகாரத்தை வழங்கி, சிறீலங்கா அரசின் உள்ளக பொறிமுறை வழியாக, சர்வதேச குறிப்பாக காமென்வெல்த் நாடுகளின் நீதிபதிகள், விசாரணை அதிகாரிகள் சட்டத்தரணிகள், வழக்கறிஞர்கள் ஆகிய தரப்புக்களை இணைத்து கொள்ள சிபாரிசு செய்வதாகத்தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நாங்கள் கண்டித்தோம். ஏனெனில், கலப்பு விசாரணை என்கிற பெயரில், அந்த தீர்மானம் முழுமையான உள்ளக விசாரணையை கோருவதாகவும், அதில் சர்வதேச பங்களிப்பினை கூட சிறீலங்கா அரசு விரும்பினால் மட்டும் தான் தலையிடாலாம் என்று தான் அந்த தீர்மானத்தில் வாரத்தைகள் மிகவும் தெளிவாக இருந்தது.

அந்த வகையில் இந்த தீர்மானங்களின் பின்னணியை நாம் பார்க்க வேண்டும். நாங்கள் 2012 முதல் இங்கு வருகிறோம். இதுவரை வந்த மூன்று தீர்மானமும் மிக கடுமையாக எதிர்த்துள்ளோம். என்னென்றால், ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்காவின் தலைமையிலே இங்கு இந்த தீர்மானத்தை முன்வைத்த தரப்புகள், ஒரு ராஜபக்ஷே-சீனா சார்பான ஆட்சியைக் கவிழ்த்து, ஒரு ஆட்சி மாற்றத்தை சிறீலங்காவில் நிகழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கோடு தான் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்று நாங்கள் குற்றம் சாட்டினோம். அப்படி கடந்த செப்டம்பரில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து உள்ள ஒரு நிலையிலே, மிகவும் பலவினமான தீர்மானமாகதான் இது இருக்கிறது. அந்த பின்னணியிலே சிறீலங்கா அரசாங்கம் கடந்த செபடம்பரில் இருந்து இதுவரை, தன்னுடைய உள்ளக விசாரணை நடத்தும் வகையில் தான் முற்றிலும் உதாசீனம் செய்யும் வகையிலே தான் ஜனாதிபதியும், பிரதமரும் ஆணித்தனமான வாக்குறுதிகளை, சொந்த சிங்கள மக்களுக்கு தந்திருக்கிறார்கள்.

பொறுப்பு கூறல் என்ற விடையம் சிறீலங்கா அரசாங்கத்தை பொறுத்த வரையில், இனப்படுகொலை செய்த ராணுவத்தை காப்பற்றும் வகையில் தான் முயற்சிகள் நடைபெறும் என்றும் வாக்குறுதிகளை வழங்கியுள்ள பின்னணியில் தான், ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் வாக்குமூல அறிக்கை வந்துள்ளது. அந்த வாக்கு மூல அறிக்கையில் குறிப்பாக அவர் உறுப்பு நாடுகளுக்கு குறிப்பிட்டு, நம்பிக்கை வைத்து இருக்கலாம் என்று கூறி இருக்கிறார். இது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கூடுதல் ஏமாற்றம் என்னவென்றால், அவருடைய சொந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை பார்த்தால், அப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கக்கூடிய வாய்ப்புகள் எதுவுமே இல்லை என்று தான் கூற வேண்டும்.

மங்கள சமரவீரா அறிக்கைக்கு முன் பேசும் போது அவரிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்டு இருந்தீர்கள். சர்வதேச அல்லது வெளிநாட்டு நீதிபதிகள் பங்கெடுப்பது தொடர்பாக அவர் வாக்குறுதி கொடுத்து இருக்கும் நிலையில் அவரை விட உயர் பதவியில் இருப்பவர்கள் சர்வதேச நீதிபதிகள் பங்கெடுப்பதற்கு மறுப்பு தெரிவத்து இருக்கும் வேளையில் அதற்கான விளக்கத்தை கொடுக்கும்படி கேட்டு இருந்தீர்கள். அதற்கு மங்கள சமரவீராவின் பதிலும், மனித உரிமை ஆணையரின் பதிலும் எந்த வகையில் இருந்தது?

மனித உரிமை ஆணையரின் கருத்து, அவர் இன்றும் கூட சிறீலங்காவின் நீதித்துறை நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருக்கும் நிலையிலே, இந்த சர்வதேச பங்களிப்பு வேண்டும் என்று வலியுத்துகிறார். மங்கள சமரவீரா எந்த ஒரு கட்டத்திலும் ஆக்கப்பூர்வமான பதிலை கொடுக்கவில்லை. மாறாக நான் இங்கு வருவதற்கு ஒரு கிழமைக்கு முன்னதாக அங்கு இருக்ககூடிய ஒரு சில மேற்குலக தூதுவர்கள் என்னை சந்திக்க சொல்லி கேட்டார்கள். அந்த இடத்தில் என்னோடு பேச, அவர்கள் கேட்டக்கேள்விகள் எந்த திசையிலே சிறீலங்கா அரசாங்கத்தின் செயல்பாடுகள் அமையப்போகிறது என்பதை சுட்டிக்காட்டும் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக, சர்வதேச நீதிபதிகளை எக்காரணம் கொண்டும் சிறீலங்கா உள்வாங்கப்போவது இல்லை என்பது போல இருக்கிறது. ஏனைய விடையங்களில், அதாவது சர்வதேச சட்டத்தரணிகள் நேரடியாக பொறுப்புக்கூறல் பொறிமுறையில் கூட கலந்து கொள்ள முடியாது. அதாவது நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர் ஆக முடியாது. அவர்களுடைய ஆலோசனையை வேண்டுமானால் வழங்கலாம் என்ற வகையிலே தான் இருந்தது. விசாரணையில் ஒரு உதவி வழங்கலாம் என்பது போல கருத்துக்கள் இருந்தது. இது மிகவும் தெளிவாக எந்தவகையிலும் இன்றைக்கு சிறீலங்காவில் இருக்கக்கூடிய மிகவும் மோசமான, நம்பகத்தன்மை இல்லாத, நடுநிலைத்தன்மை வகிக்க முடியாத நீதித்துறையின் கட்டமைப்புகளை எந்தவிதத்திலும் மாற்றியமைகின்ற கோணத்திலே எந்த ஒரு முயற்சியும் நடக்க போவதில்லை என்பது தான் அவருடைய கேள்விகள், கருத்துக்கள் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

அதுமட்டுமில்லாமல், நாம் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற விடையத்தை வலியுறுத்துகின்ற போது, அதுவும் குறிப்பாக இந்த மேற்கு நாடுகள் அந்த தீர்மானகள் நிறைவேற்றுப்பட நீங்கள் நம்பி இருக்கலாம் என்ற கோணத்திலே எங்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டு அன்றைக்கு சொல்லிய கருத்தை சுட்டிக்காட்ட, அவருடைய பதில் என்னவாக இருந்தது என்றால், இல்லை அந்த தீர்மானத்திலே நீங்கள் அந்த வார்த்தைகளை எடுத்து பார்த்தால், நாங்கள் அதை கட்டாயம், அதாவது இந்த சர்வதேச பங்களிப்பு என்பதை ஒரு ‘பேரம் பேசுவதற்கு அப்பாற்பட்ட ஒரு விடையமாக’, நாங்கள் குறிப்பிடவில்லை. மாறாக, இந்த சர்வதேச பங்களிப்பை ஆலோசனை வழங்குவதாக, encourage என்று பாவிக்கப்பட்ட வார்த்தையைத் குறிப்பிட்டு இருப்பதாக அவருடைய பதில் அமைந்தது. ஆகவே, இது அந்த கோணத்திற்கு தான் போகின்றது.

நாங்கள் ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட்ட விடையம் இது. அதாவது ஆட்சி மாற்றம் நடைபெற்றால், அதுவும் நிபந்தனையற்ற ஆட்சிமாற்றத்தை நடத்துவதற்கு தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பயன்படுத்தி அந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றால், நிச்சயமாக நிலைமைகள் இந்த அளவிற்கு மோசமாக இந்த நிலைமைகள் மாறும் என்பது தற்போது அப்பட்டமாக தெரிகிறது.

இந்த தீர்மானம் வருவதற்கு முன்னதாக, பல்வேறு தரப்பினர், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினர், சிங்கள தரப்பில் இருந்து வந்த மனித உரிமை ஆர்வலர்கள், உள்ளிட்ட பலர் சர்வதேச விசாரணையை கேட்டு இருந்தார்கள். இன்றைக்கு, அவர்கள் அப்படியான ஒரு கோரிக்கையை கைவிட்டதாக தான் நாம் பார்க்க முடிகிறது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, ஐ.நா விற்குள் நாம் பார்க்க முடியவில்லை. அமேரிக்காவினால், அதனுடைய இணை நாடுகளால் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் என்பது ஆட்சி மாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாக பார்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா?

என்னைப் பொறுத்தவரையிலே, இன்றைக்கு இருக்கிற நிலைமையை பார்த்தால், ஆட்சி மாற்றத்திற்காக மட்டும் தான், இந்த தீர்மானகள் கடந்த மூன்று, நான்கு வருடங்களாக இங்கு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றனவே தவிர, பாதிக்கபப்பட்ட தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறும் கோணத்திலே இருந்து, எந்த விதத்திலும், அவர்களுடைய முயற்சிகள் அமையவில்லை என்று தான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Transitional justice, நிலை மறு நீதி என்று சொலக்கூடிய இந்த பொறிமுறை மூலமாக நமக்கு நீதி கிடக்க வாய்ப்பு இருக்கிறது என்று வாதங்கள் சிலரால் முன் வைக்கப்படுகின்றன. அதையும் இலங்கை தர அரசு மறுக்கும். அப்போது நாம் மறுபடியும் ஒரு சர்வதேச விசாரணையை கோர முடியும் என்றெல்லாம் சில வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்த நிலைமாறு நீதி முறை பற்றிய உங்களது கருத்து என்ன?

முதல் கட்டமாக, நீங்கள் நிலைமாறு நீதி என்ற விடையத்தை உலகில் அமலாக்கி இருக்கிற நாடுகளை நீங்கள் எடுத்து பார்த்தால், எனக்கு தெரிந்த அளவிற்கு நடந்து மோதலுக்கு ஒரு அரசியல் ரீதியிலான தீர்வு கிடைத்திருக்கிற பட்சத்தில், பாதிக்கப்பட தரப்பு தான் நிலைமாறு நீதி என்ற முறையை நடத்தும் நிலைமை காணக்கூடியதாக இருக்கிறது. தென் அமேரிக்காவில் இருக்கக்கூடிய நாடுகளாக இருக்கலாம், தென் ஆபிரிக்காவாக இருக்கலாம், ஏனைய நாடுகளாக இருக்கலாம், அப்படித்தான் அங்கெல்லாம் நடந்து இருக்கிறது. பாதிக்கப்பட தரப்பு தான் அதனை கையில் எடுத்து செயல்படுத்துவதாக இருக்கிறது. அதிலும் கூட பல குறைபாடுகள் இருக்கிறது. ஆனால், அதனை ஆகக்குறைந்த பட்சம் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இன்றைக்கு இலங்கை தீவிலே நடந்த அநியாயத்தைப் பார்த்தால், கடந்த அறுபத்தி ஐந்து ஆண்டுகளாக தமிழினத்தை இனப்படுகொலைக்கு உள்ளாக்கிய தரப்பு தான் வென்றிருக்கிறது. இன அழிப்பை உச்சத்திற்கு கொண்டு சென்று, ஒரு விடுதலை போராட்டத்தை அழிக்கும் அளவிற்கு கொண்டு சென்று, அறுபத்தி ஐந்து வருடங்களாக பாதிக்கப்பட தமிழினத்தின் முதுகெலும்பை உடைத்து, வென்றிருக்கும் தரப்பினுடைய நீதியை அமல்படுத்தும் வகையில் தான் இன்றைக்கு சென்று கொண்டிருக்கிறது.

அந்த நிலையில் இந்த நிலைமாறு நீதி என்ற விடையம் இலங்கைக்கு பொருந்தாத ஒரு விடையமாக தான் பார்க்கிறோம். ஆகவே தான் நாங்கள் மீண்டும் மீண்டும், கூறுவது உள்ளக ரீதியாக ஒரு பொறிமுறையை ஏற்படுத்த முடியாது என்பதை வலியுறுத்துகிறோம். இன்றைக்கு நிலைமாறு நீதி என்று சொன்னால், அரசியல் தீர்வு இல்லாவிட்டாலும் கூட, ஏதோவொரு வகையில் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏனென்றால், யுத்தம் முடிவிற்கு வந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். அப்படி இருந்தாலும் கூட நிலைமாறு நீதி என்பதில் பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான அம்சம் குற்றவியல் நீதிமன்றங்களை உருவாக்கி, குற்றவியல் ரீதியிலான விசாரணை நடத்தி தண்டிப்பது. அதுவும், மிகப்பெரிய குற்றங்கள் இனப்படுகொலை போன்ற, போர்க்குற்றங்கள் போன்ற, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை பற்றி பேசும்போது, இலங்கை அரசாங்கம் ஒரு குற்றவியல் நீதிமன்றங்களை உருவாக்குவதில் எந்தவித அக்கறையையும் காட்டாமல், மாறாக அவர்களுடைய செயல்பாடுகள் கூடுதலாக ஒரு கருத்துருவாக்கம் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

வெறுமனே, தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றது போன்று உண்மைக் கண்டறியும் குழு. அதாவது, ஒரு சிலர் ஒரு குழுவின் முன்னே தங்கள் செய்த அநியாயங்களைக் கூறி மன்னிப்பு கேட்கின்ற கோணத்திலே, தான் இன்றைக்கு சிறீலங்க அரசாங்கம் செய்யும் நடவடிக்கைகள் அமைந்து இருக்கிறது. அரசியல் ரீதியாக கூட, தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்று, தமிழ் மக்களுக்கு படு துரோகங்களை செய்து வரும் கூட்டமைப்பு தலைவர்கள் கூட, தமிழ் மக்களின் மட்டத்திலே ஒரு கருத்துருவாக்கத்தை செய்து வருகிறார்கள். நாங்கள் பொறுப்புக்கூறல் வலியுறுத்தினால், அதாவது சர்வதேச அளவில் குற்றவியல் ரீதியிலான வலியுறுத்தினால், தமிழ் மக்களுக்கு வரக்கூடிய அரசியல் தீர்வு என்பது கைவிடப்படும் என்ற அபாயம் இருக்கிறது; ஆகவே, அதனை வலியுறுத்தாதீர்கள். வெறுமனே ஒரு உண்மை கண்டறியும் குழுவின் ஊடாக நாம் இந்த விடையங்களை பார்க்கலாம் என்கிற அளவிற்கு அவர்கள் ஒரு கருத்துருவாக்கத்தை செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.

இப்படியான ஒரு சூழலில், அந்த அறிக்கையில் கூட காணமல் போனவர்கள் பற்றியான ஒரு அலுவலகத்தை உருவாக்குவதை வரவேற்று இருக்கிறார்கள். இலங்கை பல்வேறு சர்வதேச விதிமுறைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்றெல்லாம் வரவேற்று இருக்கிறார்கள். பிறகு இலங்கையில் சுதந்திர தின பாடலை தமிழில் பாடுவதற்கு அனுமதித்து இருப்பதையும், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரன் அவர்கள் புத்த விகாரத்திற்கு சென்றதையும் ஒரு நல்லிணக்கத்தினுடைய குறியீடாக பார்க்கக்கூடிய பல்வேறு சம்பவங்களை கொடுப்பது மட்டுமல்லாமல், முக்கியமாக இலங்கை இவற்றை நடைமுறைபடுத்த நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதையும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும் போது நமக்கான இனப்படுகொலை என்கிற கோரிக்கையை இவர்கள் விசாரணைக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமில்லாத ஒரு சூழலைக் காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் இப்போது இருக்கக்கூடிய ஜனாதிபதி இந்த யுத்தத்திலே ஒரு முக்கிய பங்கு வகித்தவர் என்பது தெரிந்த பிறகும் இப்படியான ஒன்றின் மூலமாக அடுத்து வரக்கூடிய 2017 மார்ச் மாதத்திலே மனித உரிமை அவையிலே வரக்கூடிய அறிக்கை தமிழர்களுக்கு எந்த வகையிலான ஒரு சாதகமான அம்சத்தை கொண்டு வரலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லது அது எவ்வாறு இருக்கும்? அதற்கு தமிழர்கள் எந்த மாதிரியான ஒரு எதிர்வினையை உருவாக்க வேண்டும்?

என்னுடைய கருத்து வரப்போகிற மார்ச் மாதத்தில் மனித உரிமை பேரவையில் 2012 ஆம் ஆண்டு தொடங்கிய சிறீலங்கா தொடர்பான தீர்மானகளுக்கு ஒரு முடிவு கட்டுகிற கோணத்தில் தான் மார்ச் மாதத்தில் வரப்போகின்ற அறிக்கை அமையும். அதில் உறுப்பு நாடுகள் பல விடையங்கள் தொடர்பாக முன்னேற்றம் இல்லாவிட்டாலும், சிறீலங்கா தங்களைப் பொறுத்த வரையில் மனித உரிமைப் பேரவையில் இருக்கக்கூடிய ஸ்பெஷல் அஜெண்டாவில் இருந்து நாம் அகற்றலாம். ஏனென்றால், அந்த அளவிற்கு சாதகமான மாற்றம் நடைபெற்று இருப்பதாக ஒரு அப்பட்டமாக பொய்யைக் கூறி அவர்கள் அந்த முடிவை எடுப்பார்கள். அந்த கோணத்தில் தான் மார்ச் மாதத்தில் விடையங்கள் முடிவுக்கு கொண்டு வரப்படும். ஒரு வகையிலே என்னைப் பொறுத்த வரையிலே அப்படி முடிவுக்கு கொண்டுவருவது தமிழ் மக்களை பொறுத்த வரையிலே, நீதியை கோரியிருக்கிற மக்கள் என்கிற வகையிலே, பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள் என்ற வகையிலே இந்த நாடகத்துக்கு ஒரு முடிவு கட்டி, அடுத்த கட்டம் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற அளவுக்கு எங்களை தள்ளுகிற ஒரு நிலை உருவாகும் என்று தான் நான் நினைக்கிறேன்.

நாங்கள், இதுவரைக்கும் இப்படிப்பட்ட ஒரு நாடகம் இருப்பதனால் எங்களுக்கு, எங்களைப் போன்ற இதில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட, மக்களிடம் சென்று, மக்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தி, இது ஒரு பச்சை ஏமாற்றம் என்பதை விளங்கப்படுத்தி, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு நாங்கள் யோசிக்க வேண்டும் என்ற ஒரு கருத்துருவாக்கத்தை செய்ய முடியாத நிலைக்கு எல்லா தரப்பும் மக்களை உசுப்பேத்தி, ஒரு பொய்யை, ஒரு மாயையை உருவாக்கி இருந்தது. அந்த வகையில் பார்த்தால் இதுக்கு ஒரு முடிவு கட்டுவதற்கு, தொடர்ந்து ஏமாற்றைதை சந்தித்து கொண்டு இருப்பதை விட, இந்த நாடகத்திற்கு ஒரு முடிவு கட்டுவதை தான் நான் விரும்புகிறேன். அந்த வகையிலே நாங்கள் அடுத்த கட்டம் தொடர்பாக மக்களிடம் நாங்கள் நேரடியாக செல்லலாம் என்பதை தான் நான் நம்புகிறேன்.

ஆனால், துருதிர்ஷ்ட வசமாக நீங்கள் ஒன்றை கவனிதீர்களே ஆனால் இன்றைக்கு சிறீலங்கா அரசாங்கம் அத்தியாவசியமான விடையங்களில் கூட ஏமாற்றிக் கொண்டு இருக்கின்ற நிலையிலும் கூட, ஒட்டுமொத்தமாக ஐ.நா மனித உரிமையாளரின் வாய்மொழி அறிக்கையில் ஒரு நேர்மறையான செய்தி ஒன்றை குறிப்பிடும் கோணத்திலே தெரிவித்து இருந்தும் கூட, பலர் சிறீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றுகின்ற நோக்கில் செயல்படுகிற என்.ஜி.ஓ க்களாக இருக்கலாம், நாடுகளாக இருக்கலாம் தொடர்ந்து சிறீலங்கா மனித உரிமை பேரவை அஜெண்டாவிலே சிறீலங்கா இருக்க வேண்டும் என்று கேட்பது, என்னைப் பொறுத்த வரையிலே இந்த ஏமாற்றத்தை, மாயையை தொடர்ந்து வைத்துக் கொண்டு ஏமாற்றிக் கொண்டே இருப்பதற்கு வழிவகுக்கின்றதாக தான் நான் நினைக்கிறேன். நாங்கள் எதிர்பார்க்கின்ற இந்த முடிவு என்பது, அநேகமாக வரப்போவதில்லை; ஆனால், அதை தாண்டி நாங்கள் மக்களிடையே ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட போகிறோம்.

ஆணையாளர் இன்னொன்று கூறி இருக்கிறார். அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவரப் போவதாகவும், மாற்றப்பட்ட அரசியல் சாசனத்தை குறித்து ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற ஒரு விடையத்தை குறிப்பிடுகிறார். அரசியல் சாசன மாற்றம் என்பது இலங்கைக்குள் தற்போது சாத்தியமாக இருக்குமா? அது குறித்தான பொதுவாக்கெடுப்பு என்பது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? இது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எப்படிப்பட்ட ஒரு நிலைபாட்டை எடுக்கிறது? அவர்கள் இந்த அரசியல் சாசன மாற்றம் என்பதை சாத்தியம் என்று நினைக்கிறார்களா? அல்லது அரசியல் சாசனத்தில் எதை தமிழர்கள் சார்பில் சேர்க்க முன்மொழிந்து இருக்கிறார்கள் என்பது பற்றியான உங்களது கருத்து?

சிறீலங்கா பாராளுமன்றம் இந்த வருடம் ஆரம்பத்தில் ஒரு அரசியலமைப்பு மன்றமாக மாற்றப்பட்டது. ஆனால், அது மாற்றப்படுவதற்கு முன்னதாக, பாராளுமன்றத்தை, அரசியல் நிர்ணய சபையாக மாற்ற தீர்மான வரைவு தயாரிக்கப்பட்டபோது, இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற விடையம் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற விடயம் ஆரம்பத்தில் முன்வரைவில் இருந்த போது, அதை நீக்கித் தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றைக்கு கூட எனக்கு கிடைத்து இருக்கிற தகவலின் படி, அரசியல் தீர்வு என்ற விடையம் முற்றலும் புறக்கணிக்கப்படுகிற கோணத்தில் தான் அனைத்து செயல்பாடுகளும் அமைந்து இருக்கிறது. ஆகவே, தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலே தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, அவர்களுடைய தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்பட தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளகூடிய ஒரு தீர்வு என்பது வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. பூஜ்ஜியம் என்று தான் நான் கூறுவேன். அப்படிப்பட்ட நிலையிலே வெறுமனே, ஜனாதிபதியுனுடைய நிறைவேற்று அதிகாரத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதோ, இல்லையெனில் சிறீலங்கா தேர்தல் முறையிலே மாற்றங்கள் கொண்டு வருவதோ, மனித உரிமைகள் சமந்தமாக ஒரு சில சட்ட மாற்றங்கள் கொண்டு வருவதோ ஒரு பெரிய விடையம் இல்லை. அது பொதுவாக பார்த்தால் சிங்கள மக்களுக்கு தேவையான விடையங்களாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு புதிய அரசியல் அமைப்புக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக வரப்போவதில்லை. தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்க்கக்கூடிய வகையிலே, தமிழ் மக்கள் தேச உரிமைகள் அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால் மட்டும் தான் அந்த புதிய அரசியல் அமைப்பு முன்னுக்கு போகப்போவதில்லை. அதை வெளிப்படையாக அரசாங்கம் பல இடங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு கூறி இருக்கிறது. அதுவும் ஆணித்தனமாக ஆங்கில, சிங்கள ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ் ஊடகங்களும் தான் இந்த உண்மையை தமிழ் மக்களுக்கு கொண்டு செல்லாமல் இறக்கின்றன.

நீங்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக இருக்கிறீர்கள். அந்தக் கட்சியின் தலைவராக நீங்கள் எந்த கருத்தை இந்த சமயத்தில் பதிவு செய்ய விரும்புகீறீகள்? தமிழக மக்களிடத்திலே நீங்கள் என்ன ஒரு கருத்தை தெரிவிக்க விரும்புகிறீர்கள்?

உண்மையிலேயே எங்களுக்கு பலத்த சவால்கள் தாயகத்தில் இறக்கின்றன. நாங்கள் ஜனவரி 8 ஆம் தேதி ராஜபக்ஷேவின் ஆட்சி இருக்கின்ற வரைக்கும் உண்மையிலேயே எங்களுக்கு முன்னகர்த்த முடியாத ஒரு நிலைமை இருந்தது. நாங்கள் பயப்பட்டுக்கொண்டு இருந்தோம். உங்களோடு எதோவொரு வகையில் உறவு வைப்பதற்கு கூட பயந்து கொண்டு இருந்தோம். ஆனால், அந்த ஆட்சி மாறிய கையோடு மக்கள் மனதிலே இன்னும் கொஞ்சம் கூடுதல் சுதந்திரத்தோடு செயல்படலாம் என்ற ஒரு நம்பிக்கை கட்டி எழுப்பப்பட்டிருந்தபடியால், நாங்கள் கொஞ்சம் கூட மக்கள் மட்டத்தில் வேலை செய்யக்கூடிய ஒரு சூழல் உருவாகியிருந்தது. துருதிர்ஷ்டவசமாக, இந்த தேர்தலுக்கு பிற்பாடு, தேர்தல் முடிவுகளாலே நாங்கள் வெல்லாத பட்சத்திலே, ஒரு பின்னடைவு அடைந்து இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.

ஒரு சோர்வு நிலையை கட்சி மட்டத்திலேயும் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், நாங்கள் படிப்படியாக அந்த இடத்தில் இருந்து கட்சியைப் பொறுத்த வரையிலே விடிவாகிறோம். எங்களைப் பொறுத்த வரையிலே, நாங்கள் மக்கள் மட்டத்திலே, மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலுக்குள் நாங்கள் இறங்காவிட்டால், இந்தக கட்சியினுடைய செயல்பாடுகள் அல்லது அமைப்பினுடைய செயல்பாடுகள் முன்னுக்கு கொண்டு போக முடியாத நிலை உருவாகும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆக, அதை நோக்கித்தான் நாங்கள் போகப் பார்க்கின்றோம். அதிலே எங்களுக்கும் கூட பல குறைகள் இருக்கலாம். நாங்கள் செயல்படுகின்ற விதங்கள், நாங்கள் எந்த ஒரு தூரத்திற்கு மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலில் உருவாவதில் அனுபவம் இருக்கின்றது இப்படிப்பட்ட கேள்விகள் இருக்கின்றன. நாங்கள் அதற்கு பழகுவதற்கு தயாராகி இருக்கின்றோம். கட்சி என்ற கோணத்திலே இது தான் எங்களுக்கு இருக்கக்கூடிய சவால்கள். இதை தாண்ட வேண்டும் என்பதிலே நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால், ஒட்டுமொத்தமாக தமிழர்கள் என்ற கோணத்தில் பார்த்தால், நாங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் வலியுறுத்துகின்ற விடையம் என்னவென்றால், உண்மையிலேயே ஈழத்தமிழர்களுடைய மிகப்பெரிய பலம் தமிழகம். தமிழீழம் என்ற விடையத்திற்கு முக்கியத்துவம் வரக்காரணமே தமிழகம். பூகோள அரசியல் கோணத்தில் எடுத்து பார்த்தால் என்னைப்பொறுத்த வரையில், இலங்கை தீவினை விட தமிழகத்திற்கு தான் முக்கியத்துவம் அதிகம்.

ஆனால், அது இந்தியாவினுடைய ஒரு அங்கமாக இருக்கின்ற பட்சத்தில் அதனை பிரித்து பார்ப்பது இல்லை. இலங்கை தீவிலே ஒரு விடுதலை போராட்டம் கடந்த முப்பத்து ஐந்து வருடங்களாக இருந்து வரும் காரணத்தினாலே அது தெளிவாக, வேறாக பார்க்கப்படுகிறது. அந்த வகையிலே, தமிழகமும் தமிழீழமும் ஒன்றிணைந்து ஒரு வேலை திட்டத்திற்கு, ஒரு புது நிலைப்பாட்டிற்கு வரலாம் என்று நாங்கள் நிற்கிறோம். அது இந்த பூகோள அரசியல் விடையத்தில் ஒரு காத்திரமான ஒரு ஆதிக்கத்தை ஒரு அழுத்தத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். நாங்கள் எதிர்பார்க்கின்ற அளவிற்கு நூற்றுக்கு நூறு வீதமான ஒரு வெற்றியை உடனடியாக எடுக்காவிட்டாலும் கூட, ஆகக் குறைந்தபட்சம் திட்டமிட்டு இன்றைக்கு அழிக்கப்படுகின்ற ஈழத்தமிழர்களின் அடையாளம், தேசம் என்கிற அழிக்கப்படுகின்ற விடையதையாவது உடனடியாக காப்பாற்றக்கூடியதாக இருக்கும். அந்த விடையத்தில் ஏதோவொரு வகையிலே ஒரு வேலை திட்டத்திற்கு நகர வேண்டும். ஆனால், இது வருவதிற்கு நிச்சயமாக பூகோள அரசியல் முக்கியத்துவம் கருதி, பல கோணத்தில் இருந்து பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுமே தவிர, ஒருபோதும் சுகமாக அந்த புரிந்துணர்விற்கும், அந்த புது வேலைத்திட்டத்திற்கும் நாம் வருவதை வெள்ளை அரசுகளும், பெரிய தரப்புகளும் கடைசிவரைக்கும் விரும்பப்போவதில்லை. அதை ஒரு சவாலாக எடுத்து நாம் செயல்படலாம் என்றால் நான் நிற்கிறேன்; கணிசமான மாற்றத்தை நாம் செய்யலாம் என்று.
நன்றி


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. eastern_sun шановні, в мене таке враження, що ви зміст статті так і не вловили. Суть в чому: якщо на сайті є 3 мови: англійська, українська, російська, то браузер із АÃÂ°ÃÂ¿Ã‘€Ð¾Ð¿Ð¾Ã½÷¾Ð²Ð°Ð½Ð¸Ð¼Ð¸ на сайті налаштуваннями буде завантажувати спочатку українську версію сайту. Користувач при бажанні увімкне іншу версію. Але якщо на сайті взагалі одна мова – українська, то це налаштування не працює.

Your email address will not be published.

Scroll To Top